சமீப காலமாக, கொடூரமான கொலை செயல்கள் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் நடந்த இரண்டு கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதில், லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரது காதலன் கொலை செய்து அவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி எரிந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது.


தொடரும் கொடூர கொலைகள்:


இந்த சம்பவத்தை தொடர்ந்து, இளம்பெண் ஒருவரை அவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனே கேபிள் வயரை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் மனதை பதற வைத்தது.


ஷ்ரத்தா கொலை வழக்கைப் போன்று, 24 வயதான சாஹில் கெலாட், தனது காதலியைக் கொலை செய்து அதை மறைக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டார். கடும் வாக்குவாத்திற்கு வாக்குவாதத்திற்குப் பிறகு காதலி நிக்கியை கொலை செய்தார். மேலும், தன்னுடைய குடும்பத்தினருக்கு சொந்தமான உணவகத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியில் உடலை மறைத்து வைத்திருந்தார்.


உத்தர பிரதேசத்தில் மற்றுமொரு அதிர்ச்சி:


இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சொத்து தகராறு காரணமாக 62 வயதான முதியவரை அவரது மகனே கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "கொலையைத் தொடர்ந்து, 30 வயதான கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர், தந்தையின் உடலை சூட்கேஸில் வைத்து அப்புறப்படுத்த அதை துண்டுகளாக வெட்டியுள்ளார்.


திவாரிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூரஜ் குந்த் காலனியில் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த நபரின் சகோதரர் பிரசாந்த் குப்தா போலீஸிடம் புகார் அளித்ததன் பேரில் அவர்கள் நேற்று இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்"


சுத்தியால் அடித்து கொலை:


"கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் முரளி தர் குப்தா. சந்தோஷ் குமார் குப்தா என்ற பிரின்ஸ் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. வீட்டில் தனியாக இருப்பதைக் கண்ட குற்றவாளி, தந்தையை சுத்தியலால் தாக்கியுள்ளார். 


இதில், படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், தன்னுடைய அறையில் இருந்து சூட்கேசை எடுத்து வந்து, சடலத்தின் துண்டுகளை சூட்கேசில் வைத்து வீட்டின் பின்புறம் உள்ள தெருவில் மறைத்து வைத்துள்ளார். 


குற்றவாளியின் சகோதரர் அளித்த தகவலின் பேரில் போலீசார் உடல் உறுப்புகளை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என காவல்துறை கண்காணிப்பாளர் (நகரம்) கிருஷ்ண குமார் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.