தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நாட்டில் கொரோனா தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான் வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. தற்போது பரவி வரும் h3n2 வைரஸ், ஒரு வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தான் என்றும் இணை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். H1n1 வைரஸின் மாறுபாடு தான் இந்த h3n2 வைரஸ் என மருத்துவர்கள் கூறுகின்றனர். காய்ச்சல், தொண்டை புண், இருமல், உடல்வலி மற்றும் சளி ஆகிய அறிகுறிகளுடன் இந்த வைரஸ் பரவி வருகிறது என்றும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதித்தவர்கள் 3-4 நாட்கள் வீட்டில் தனிமையாக இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


இந்திய அளவில் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பிப்ரவரி மாத நிலவரப்படி 955 பேர் இன்ஃப்ளூயன்ஸா  வைரஸால் பாதிக்கபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 545 பேருக்கும்,  மகாராஷ்டிராவில் 170 பேருக்கும், குஜராத்தில் 74 பேருக்கும், கேரளாவில் 42 பேருக்கும், பஞ்சாப்பில் 28 பேருக்கும் என தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.


மேலும் தமிழகத்தில் கோவிட் மற்றும் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்ட திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் அதிகபட்சமாக தமிழகத்தில் 545 பேருக்கு இன்புளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் H3n2 காய்ச்சல் பாதித்தவர்களுக்கு, 11 ஆயிரத்து 333 மருத்துவ கட்டமைப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார, மாவட்ட, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உட்பட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருந்துகள் கையிருப்பு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதற்காக காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.


இந்த வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், வெறும் கைகளால் முகத்தை தொடுவது தவிர்க்க வேண்டும், தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது. அதேபோல முதியவர்கள், இணை நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவ்பதால் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


H3n2 காய்ச்சலால் இதுவரை கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஹரியானாவில் தலா ஒருவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்று பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  ஒசெல்டாமிவிர் என்ற மருந்து இந்தக் காய்ச்சலுக்கு உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பொது சுகாதார மையங்களில் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.