மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் ஒருவரின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாயை அமலாக்கத்துறை இயக்குனரகம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறை இயக்குநரகம் சோதனை நடத்தியது.
"இந்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழலின் குற்றத்தின் மூலம் இந்த பணம் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது" என அமலாக்கத்துறை இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பணம் எண்ணும் இயந்திரத்தின் மூலம் பணத்தை எண்ண வங்கி அலுவலர்களின் உதவியை விசாரணை குழுவினர் நாடி உள்ளனர். வீட்டில் சோதனை நடத்திய போது சிக்கிய 2000 ரூபாய், 500 ரூபாய் கட்டுகளின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளன.
அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை எதற்காக பயன்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சட்டர்ஜியைத் தவிர, கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் சி அதிகாரி, எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது.
மேற்குவங்க பள்ளி கல்வித்துறை ஆணையத்தின் மூலம் அரசு நடத்தும் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோத நியமனங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படும் போது, தற்போது தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி, கல்வி அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
இந்த சோதனையை கடுமையாக விமர்சித்துள்ள ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், "மத்திய பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளை துன்புறுத்த மேற்கொண்ட தந்திரம்" என குறிப்பிட்டுள்ளது.
"திரிணாமுல் நடத்திய தியாகிகள் தின பேரணி நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அடுத்த நாளே, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது. திரிணாமுல் தலைவர்களை துன்புறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் ஒரு முயற்சியே தவிர இது வேறில்லை" என்று மேற்கு வங்க போக்குவரத்து அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் விமர்சித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்