பஞ்சாப் மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.




இந்த நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டுள்ளது. சரண்ஜித்சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாபில் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,100 வழங்குவதாக அறிவித்துள்ளனர். மேலும், பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றினால் ஆண்டுதோறும் எட்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்புடம் என்றும் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது.


பஞ்சாபில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கான வாக்குகள் வரும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட உள்ளது. பஞ்சாப் காங்கிரசில் அந்த மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் விலகியதற்கு பிறகு, பஞ்சாப் முதல்வராக சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து முதல்வர் வேட்பாளராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரண்ஜித்சிங் சன்னியையே முதல்வர் வேட்பாளராக ராகுல்காந்தி அறிவித்தார்.




பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் போட்டி அளித்து வருகிறது. இதன்காரணமாகவே, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் இலவச சிலிண்டர்கள், மாதந்தோறும் மகளிருக்கு நிதிஉதவி உள்ளிட்ட திட்டங்களை அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ்நாட்டிலும் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண