சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள உமர் காலித்தை விலங்கிட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 


இதனையடுத்து, எதன் அடிப்படையில் கைவிலங்கு போடப்பட்டது?  இதற்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதா? என்று  விளக்கம் கேட்டு சிறைத்துறை இயக்குநர் ஜெனரலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


முன்னதாக, 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்தச் சட்டம் இந்தியர்களின் ஒற்றுமை, சகோதரத்துவத்தைப் பாதிக்கும் என்றும், குறிப்பாக இந்திய குடிமக்கள் பதிவேடு - குடியுரிமை திருத்தச் சட்டம், -தேசிய மக்கள் தொகை பதிவேடு விளிம்பு நிலையில் உள்ள இஸ்லாமியக் குடிமகனை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஷாகீன் - பாக் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெகுஜன போராட்டங்கள் நடைபெற்றன. 


பிப்ரவரி 23, 2020 அன்று, பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கபில் மிசுரா, சாகீன்பாக்கில் போராட்டக்காரர்களை வெளியேற்றுமாறு தில்லி காவல்துறையிடம் கேட்டுக் கொண்டார். மேலும், போராட்டக்கார்களுக்கு கெடு விடுத்தார். இதனையடுத்து, ஏற்பட்ட இந்த வன்முறை சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


 



உமர் கலித்


இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக,2020 செப்டம்பர் 13ம் தேதி, முன்னாள் ஜே.என்.யு  மாணவர் உமர் கலித்-ஐ காவல்துறையினர் கைது செய்தனர். பொதுவாக, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் கும்பல் மீது போடப்படும்  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் உமர் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.   


ஆனால், டெல்லி காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டினர். முன்னதாக, உமர் காலித் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய அவரது வழக்கறிஞர், "ரிபப்ளிக், நியூஸ் 18 ஆகிய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பான செய்தியின் அடிப்படையிலேயே  காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தகவல் தொழில்நுட்ப பிரிவித் தலைவரான அமித் மாளவியா தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட திருத்தப்பட்ட வீடியோவின் (Edited Video) ஒரு பகுதி தான் தொலைக்காட்களில்  வெளியானது . உண்மையில், உமர் கலித்தின் ஒட்டுமொத்த பேச்சையும் கேட்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தைப் பிரதிபலிக்கும் விதமாக பேசியுள்ளார்" என்று வாதாடினார்.  


ஆளும் கட்சியைச் சார்ந்த ஒருவர் வெளியிட்ட, அதுவும் திருத்தப்பட்ட வீடியோவின் அடிப்படையில், உமர் கலித் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதா?  என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. 


இந்நிலையில், உமர் காலித்தை விலங்கிட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு, கண்டனம் தெரிவித்த கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத், “குற்றவாளி உமர் கலித் கைவிலங்குடன் வரவழைக்கப்பட்டது உண்மையா? அப்படியானால் எந்த விதிமுறையின் அடிப்படையில் இவ்வாறு அழைத்து வரப்பட்டார்.  இந்தப் புகார்கள் குறித்து மூத்த அதிகாரி மூலம் விரிவான அறிக்கையைப் பெற்று டெல்லி காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் "என்று குறிப்பிட்டார். 


டெல்லி சிறைத் துறையின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “குற்றவாளிக்கு உண்மையில் கைவிலங்கு போடப்பட்டதா?என்பதை சோதித்து வருகிறோம். உண்மை கண்டறியும் பிரிவு விரைவில் விளக்கமளிக்கும். ஏன் கைவிலங்கு போட்டனர் என்பது குறித்தும், கைவிலங்கு தொடர்பான முந்தைய நீதிமன்றங்களின் உத்தரவுகளையும், நிபந்தனைகளையும் தெரிந்துகொள்ள நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றும் குறிப்பிட்டார். 






ஒருவரின் உயிரோ, உடல்சார் உரிமையோ (life or personal liberty), சட்டம் விதித்தமைத்துள்ள நெறிமுறைப்படி அன்றி, பறிக்கப்படுதல் ஆகாது என்ற இந்திய அரசியலமைப்பின் 21வது சட்டப் பிரிவுக்கு எதிரான வகையில் டெல்லி சிறைத்துறை அதிகாரிகளின் செயல் அமைந்திருப்பதாக உமர்காலித்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், உமருக்கு சிறை விலங்கு போடக்கூடாது என்ற இரண்டு நீதிமன்ற உத்தரவுகளையும் அவர் எடுத்துக் கூறினார்.


முன்னதாக, கடந்தண்டு ஜூன் மாதம் உமர் காலித்தை சிறை விலங்கு போட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வர அனுமதி கோரி டெல்லி காவல்துரை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.