கடந்த 2021ஆம் ஆண்டு, இந்தியாவில் 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 108 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாகவும், 13 ஊடக நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் பத்திரிகையாளர்கள் பலரும் காவல் நிலையங்களுக்கு சம்மன் அளித்து வரவழைக்கப்படுவது, வழக்குப் பதிவு மேற்கொள்ளப்படுவது, பத்திரிகையாளர்களின் வீடுகளில் ரெய்ட் நிகழ்த்துவது, பாதுகாப்புப் படையினரால் தாக்கப்படுவது முதலானவை நிகழ்ந்திருப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Rights and Risks Analysis Group (RRAG) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள `இந்திய பத்திரிகை சுதந்திரம் அறிக்கை 2021’ என்ற அறிக்கையில், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பத்திரிகையாளர்களும், ஊடக நிறுவனங்களும் கடந்த ஆண்டு குறிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்த 6 பத்திரிகையாளர்களுள் உத்தரப் பிரதேசம், பீஹார் மாநிலங்களில் இரண்டு பத்திரிகையாளர்களும், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 8 பெண் பத்திரிகையாளர்கள் கைது, சம்மன், வழக்குப் பதிவு முதலானவற்றை எதிர்கொண்டதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 25 ஊடக நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டு அந்த மாநிலம் இந்தப் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. 23 ஊடக நிறுவனங்கள் உத்தரப் பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்தில் 16 ஊடக நிறுவனங்களும், திரிபுராவில் 15 ஊடக நிறுவனங்களும், டெல்லியில் 8 ஊடக நிறுவனங்களும், பீஹாரில் 6 ஊடக நிறுவனங்களும், அசாமில் 5 ஊடக நிறுவனங்களும், ஹரியானாவிலும் மகாராஷ்டாவிலும் தலா 3 ஊடக நிறுவனங்களும், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 2 ஊடக நிறுவனங்களும், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்களில் தலா 1 ஊடக நிறுவனங்களும் குறிவைக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
RRAG அமைப்பின் இயக்குநர் சுஹாஸ் சக்மா, `ஜம்மு காஷ்மீர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பத்திரிகை சுதந்திரம் மீதான அடக்குமுறையே நாட்டில் குறைந்து வரும் ஜனநாயக வெளியைக் குறிக்கிறது’ எனக் கூறியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு, சுமார் 24 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டும், மிரட்டப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், தங்கள் பணியில் இருந்து தடுக்கப்பட்டும் உள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. இந்த 24 பத்திரிகையாளர்களுள் 17 பேர் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர்களை உடல்ரீதியான தாக்குதலுக்குக் காவல்துறையினர் உள்ளாக்கிய நிகழ்வுகள் அதிகளவில் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு, பல்வேறு மாநிலங்களில் 44 பத்திரிகையாளர்களின் மீது வழக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல பத்திரிகையாளர்கள் மீது பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இதில் அதிகளவிலான வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 44 பத்திரிகையாளர்களுள் 21 பத்திரிகையாளர்களுக்கு விரோதத்தை வளர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 153ஆம் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.