வரும் பிப்ரவரி 5 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இக்ரிசாட் நிறுவனத்தின் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, 11வது நூற்றாண்டின் துறவி ஸ்ரீ ராமானுஜாச்சார்யாவின் 216 அடி சிலையையும் திறந்து வைக்கிறார். இந்த சிலைக்கு `சமத்துவத்தின் சிலை’ எனப் பெயர்சூட்டப்பட்டுள்ளது. 


பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை தெலங்கானாவின் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் இன்று மேற்பார்வை செய்துள்ளார். 


தெலங்கானா அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `முசிந்தால், இக்ரிசாட் ஆகிய இடங்களில் பிப்ரவரி 5 அன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது குறித்து வெவ்வேறு துறைகளின் தலைமை அதிகாரிகளுடன் சந்தித்து பேசினார்’ எனக் கூறப்பட்டுள்ளது. 



மேலும் இந்த செய்திக் குறிப்பில் பிரதமரின் வருகையை ஒட்டி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள், சாலைப் போக்குவரத்து மாற்றங்கள் ஆகியவை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் விதிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 






தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை, ஸிங்க் ஆகிய உலோகங்களால் உருவாக்கப்பட்ட `பஞ்சலோகம்’ என்ற உலோகத்தால் செய்யப்பட்ட மிக உயர்ந்த உலோகச் சிலைகளுள் ஒன்று. இந்தச் சிலை அமரும் நிலையில் உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்த நிகழ்ச்சியின் போது, ஸ்ரீ ராமானுஜாச்சார்யாவின் வாழ்க்கைப் பயணம், தத்துவம் முதலானவற்றின் 3D வடிவிலான விளக்கக் காட்சி காட்டப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலையைச் சுற்றி செய்துக்கப்பட்டுள்ள 108 திவ்ய தேச மாதிரி வடிவங்களையும் பிரதமர் மோடி பார்வையிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மேலும், இக்ரிசாட் நிறுவனத்தின் செடிகளைப் பாதுகாக்கும் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு நிலையத்தையும், பயிர்களை வேகமாக வளர வைக்கும் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். 


ஆசியா, சஹாரா பாலைவனப் பகுதிகள் நிரம்பிய ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் வாழும் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 



இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இக்ரிசாட் நிறுவனத்தின் புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் லோகோவையும், இந்த அமைப்பின் நினைவாக அஞ்சல் தலையும் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இக்ரிசாட் நிறுவனம் ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் விவசாயத் துறைக்காகப் பணியாற்றும் சர்வதேச நிறுவனம் ஆகும். விவசாயிகளுக்கு மேம்பட்ட பயிர் வகைகளை வழங்குவது, வறண்ட பகுதிகளின் வாழும் சிறிய முதலீட்டு விவசாயிகளுக்குக் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உதவுவது முதலான பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.