டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி அவென்யூ நீதிமன்ற விடுமுறைக்கால நீதிபதி பிந்து உத்தரவிட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகையாக அரவிந்த் கெஜ்ரிவால் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் உத்தரவு முதலில் சிறைக்கு வர உள்ளதால், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) மதுபான கொள்கை கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து கடந்த மே மாதம், மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜூன் 01 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து ஜூன் 2ம் தேதி மீண்டும் சரணடைந்தார்.
ஜாமீன்:
முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து இரண்டாவது நாளாக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் மற்றும் அமலாக்கத்துறையின் வாதங்களை நீதிமன்றம் கேட்டறிந்த நிலையில், நீதிமன்றம் விசாரித்து கெஜ்ரிவாலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி எக்ஸ் பக்கத்தில் “சத்யமேவ் ஜெயதே” என்று எழுதினார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், "இப்படிப்பட்ட நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவது ஜனநாயகத்தை வலுப்படுத்தப் போகிறது. இது டெல்லி மக்களுக்கு நல்ல செய்தி. இதுவரை ED இன் அறிக்கைகள் பொய்களை அடிப்படையாகக் கொண்டவை... இது கேஜ்ரிவாலை சிக்க வைக்க உருவாக்கப்பட்ட ஆதாரமற்ற போலி வழக்கு.” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே கூறுகையில், “இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. முழு வழக்கும் போலியானது என்று முதல் நாளிலிருந்தே கூறி வருகிறோம். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மதிக்கிறோம்.” என தெரிவித்தார்.