பேருந்தில் சேவலுடன் பயணம் செய்த நபரிடம் சேவலுக்கும் சேர்த்து 30 ரூபாய் பயணச்சீட்டு வழங்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்புத் தற்போது பிரபலமடைந்து வருகிறது. சிறுவிடை, பெருவிடை, கருங்கோழி என ரகம் வாரியாக வளர்த்து வருகிறார்கள். அதிலும் தென்னிந்தியாவில் சண்டை சேவல்களுக்கு தற்போது மவுசு அதிகமாகி வருகிறது. சேவல் சண்டைகள் நடத்துவதற்கான அனுமதி இல்லாத நிலையிலும் சிலர் சண்டை செய்யும் சேவல் இனம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக வளர்ப்பார்கள். அவை எடை மற்றும் உயரம் சாதாரண கோழியைவிட அதிகமாக இருக்கும். இந்நிலையில்தான் தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்தில் கொண்டுச் செல்லப்பட்ட சண்டை சேவலுக்கும் உயரம் அதிகமாக இருந்ததால் பயண சீட்டு வழங்கப்பட்ட வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.



தெலங்கானா மாநிலம், கோதாவரிகானி பேருந்து நிலையத்தில் இருந்து கரீம்நகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சென்ற முகமது அலி என்பவர், தன்னுடன் சண்டை சேவலை கூண்டில் வைத்து கொண்டு சென்றுள்ளார்.  அதை கவனித்த நடத்துநர் ஜி. திருப்பதி, சேவல் உயரமாகவும் பெரிதாகவும் இருந்தசதால் தனியாக டிக்கெட் வாங்க வேண்டும் என்றும் இல்லையெனில் பேருந்தை விட்டு கீழே இறங்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பயணி, சேவலுக்கும் 30 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்த பிறகு தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார். டிக்கெட் வாங்கும் முன் நடத்துனருக்கும் சேவல் உரிமையாளர் முகமது அலிக்கும் இடையே டிக்கெட் எடுக்கும் வாக்குவாதத்தில் நடந்த சண்டை காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.






இதுகுறித்து பேசிய நடத்துநர், சேவலுக்கு டிக்கெட் பெற்றதாகவும், மாநில பேருந்துகளில் உயிருள்ள அனைவரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது விதி என்றும், பயணிகளுடன் கொண்டு செல்லப்படும் செல்ல பிராணிகளுக்கும் டிக்கெட் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ சமூக தலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து டிஎஸ்ஆர்டிசி கோதாவரிகனி டிப்போ மேலாளர் வி வெங்கடேசன், தரப்பில் கூறப்பட்டதாவது, "சேவலுக்கு பயணச்சீட்டு கொடுப்பதற்கு பதிலாக விலங்குகளுடன் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறி அந்த பயணியை கண்டக்டர்  இறக்கிவிட்டு இருக்கலாம். ஆனால் துணியால் சுற்றப்பட்டிருந்ததால் நடத்துனர் முதலில் அதை கவனிக்கவில்லை." என்று கூறினார். இந்நிலையில் இச்சம்பவத்தில் கவனக்குறைவாகவும், விதிகளை மீறியும் சேவலுக்கு பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நடத்துநரிடம் விளக்கம் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்னதான் இவ்வளவு சர்ச்சைகள் கிளம்பினாலும் அந்த சேவல் பாதுகாப்புடன், கொக்கரக்கோ கூவலுடன் கரீம்நகர் சென்று சேர்ந்தது என்று சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கிறார்கள்.