ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவ்த்துடன் உயிரிழந்த லிடெரின் 16 வயது மகள் செய்த பழைய ட்வீட்டை வலதுசாரிகள் தோண்டியெடுத்து ட்ரோல் செய்து வருகின்றனர். 


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.  ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர். 


அதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி முதுலிகா ராவத், ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், சாய் தேஜா, சாத்பால், சவுஹான், குல்தீப், பிரதீப், தாஸ் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். 



இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதனால் உண்மை வெளிவரும் வரை யூகம் செய்யாதீர்கள் எனவும் விமானப்படை தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து முப்படைகளின் விசாரணைக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உண்மையை கண்டறியும்வரை யூகம் செய்யாதீர்கள். விரிவான விசாரணை நடத்தி விரைவாக உண்மைகள் வெளியிடப்படும். இறந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும்வகையில் யூகங்களை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. 


இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் உடல்களும் விமானம் மூலம் குன்னூரில் இருந்து டில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவரது உடல்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 



அதன்படி, டில்லி கண்டோன்மெண்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் எல்.எஸ் லிட்டருக்கு குடும்ப முறைப்படி இறுதி சடங்கு நடைபெற்றது. தொடர்ந்து எல்.எஸ். லிடரின் உடலுக்கு அவரது மனைவியும், மகள் ஆஷ்னாவும் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லிடரின் மகள் ஆஷ்னா “என் தந்தையின் மறைவு நாட்டுக்கான இழப்பு. அவர் எனது ஹீரோ, எனது நண்பர். எனக்கு 17 வயது ஆகப்போகிறது. அவர் இதுவரை என்னுடன் இருந்த நினைவுகளுடன் பயணிப்பேன். இனி வரும் காலங்களில் நல்லது நடக்கும்” எனத் தெரிவித்தார். 


இந்நிலையில், உயிரிழந்த லிடெரின் 16 வயது மகள் ஆஷ்னா செய்த பழைய ட்வீட்டை வலதுசாரிகள் தோண்டியெடுத்து ட்ரோல் செய்து வருகின்றனர். அதில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்திருந்தார். அதனால் ஆத்திரமடைந்த வலதுசாரிகள் அவரின் ட்வீட்டை டோரோல் செய்யத்தொடங்கினர். அவர் தந்தையின் இறுதி சடங்கிற்கு முன்பே அவரை கிண்டல் செய்து ட்வீட் செய்ய ஆரம்பித்து விட்டனர். அவரது தந்தை இறுதிச்சடங்கு நடைபெற்றவுடன் அவரது ட்விட்டர் கணக்கை அவர் நீக்கியுள்ளார். 




இத்தகைய ட்ரோலிங்கிற்கு எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் ஆனால் பாஜக தலைவர்கள், ராணுவத்தையும் அதன் தியாகிகளையும் போற்றுவதாகக் கூறும் தேசியவாதத்தின் கட்சிகள் மௌனம் காத்தனர்.


ஆஷ்னா செய்த பழைய ட்வீட்டில், “யோகி ஆதித்யநாத் எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பிடுவதை கண்டு எழுந்தேன். நான் தெரிந்து கொண்டேன். இதுதான் அரசியல். ஆனால், 'அவள் தரையைத் துடைக்க மட்டுமே வல்லவள்' போன்ற விஷயங்களைச் சொல்வது மலிவானது மற்றும் முற்றிலும் சரியல்ல. பல்லில்லாத புலி உறுமுவதை நிறுத்தாது. உண்மையாக. உத்தரப்பிரதேசத்தில் நிலவும் கொந்தளிப்பை முதலில் நிறுத்துங்கள் யோகி” எனத் தெரிவித்திருந்தார். 




கடந்த அக்டோபர் மாதம் சித்தாப்பூர் விருந்தினர் மாளிகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காவலில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் துடைப்பத்தால் அறையை பெருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்திருந்தார்.  “மக்கள் காங்கிரஸ் தலைவர்களை இம்மாதிரியான பணிகள் மேற்கொள்ள தகுதியுள்ளவர்களாக மாற்ற விரும்புகின்றனர். அதற்குதான் அவர்களை உருவாக்கியுள்ளனர். மற்றவர்களுக்கு தொல்லை தருவதும் எதிர்மறை கருத்துக்களை பகிர்வதும் மட்டுமே இவர்களின் பணி. இவர்களுக்கு வேறு வேலையே இல்லை” என விமர்சித்திருந்தார். 


இதுகுறித்து பேசிய பிரியங்கா காந்தி “இப்படி விமர்சித்து யோகி என்னை அவமானப்படுத்தவில்ல். சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் தலித் சகோதர சகோதரிகளை அவமானப்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார். 


மேலும் பார்க்க..