இடுக்கி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது. வனத்துறையினர் அதனை மயக்க மருந்து செலுத்திப் பிடித்தனர்.  


5 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சுறுத்தி வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பிடிபட்ட அரிசி கொம்பன் யானையை தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் விட கேரள வனத்துறை முடிவு செய்துள்ளது. கும்கி உதவியுடன் அதனை வேறு இடத்துக்கு அதிகாரிகள் ஏற்றி அனுப்பியுள்ளனர்.


இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:


அரிசி கொம்பன் பல ஆண்டுகளாக கேரள வனப்பகுதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கேரள வனத் துறையினர் குழு அமைத்து அதை ஒருவழியாகப் பிடித்துள்ளனர். இது குறித்து வனத்துறை அமைச்சர் ஏகே சசீதரன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக நன்றி தெரிவித்துள்ளார். இனி வனத்தின் அடர்ந்த பகுதியில் விடுவிக்கப்படும் அரிசி கொம்பன் கழுத்தில் ரேடியோ காலர் கட்டுப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


முன்னதாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றம் அரிசிக் கொம்பனைப் பிடிக்க ஒரு குழு அமைக்குமாறு உத்தரவிட்டது.


அரிசி கொம்பன் பெயர் காரணம்


இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் அரிசி கொம்பன் என்ற யானை பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த யானை அரிசி மூட்டைகளை குறிவைத்து ரேஷன் கடைகளில் புகுந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு தானியங்களை தின்பதை வழக்கமாக கொண்டிருந்தது. இதனால் இந்த யானைக்கு அரிசி கொம்பன் என்ற பெயர் வந்தது.