RG Kar Case: கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் நாளை முதல் பணிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.


வேலை நிறுத்தம் ஓவர்:


கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்தும், குற்றவாளிகள் தண்டிக்க வேண்டும் எனவும்,  மருத்துவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் கடந்த 41 நாட்களாக பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு, அண்மையில் போராட்டக் குழுவினருடன், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எட்டப்பட்ட சுமூக முடிசுகளை தொடர்ந்து, நிபந்தனையுடன் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


அரசுக்கு மருத்துவர்கள் போட்ட கன்டிஷன்..!


அறிவிப்பின்படி,  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் செப்டம்பர் 21 முதல் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீண்டும் தொடங்குவார்கள். அதேநேரம், புறநோயாளிகள் சேவை பிரிவுக்கான பணியில் ஈடுபடமாட்டோம் என அற்வித்துள்ளனர். ஆர்.ஜி.கர் வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துமாறு ஐ.பி.ஐ., அமைப்பை வலியுறுத்தி, ஸ்வஸ்தா பவனில் இருந்து சி.ஜி.ஓ வளாகத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகம் வரை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் போராட்டத்துடன் இன்று அந்த போராட்டம் முடிவடையும் எனத் தெரிகிறது. மேற்குவஙக அரசின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒரு வாரம் காத்திருப்பதாகவும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


புதன்கிழமை நடந்த 5 மணி நேர சந்திப்பு:


பிரச்னைக்கு தீர்வு காண மேற்குவங்க அரசு சார்பில், இளநிலை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஐந்தரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின் போது, ​​மருத்துவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் தங்களின் பாதுகாப்பு மற்றும் முதலமைச்சர் உடனான சந்திப்பில் உறுதியளிக்கப்பட்ட பணிக்குழுவின் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் விவதிக்கப்பட்டன. அதன் முடிவில் தற்போது, நிபந்தனைகளுடன் மீண்டும் பணிக்கு திரும்புவதாக பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த வழக்கில் ஏற்கனவே சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் அந்த வழக்கை முதலில் கையாண்ட தாலா காவல்நிலைய பொறுப்பு அதிகாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதனிடையே, மேற்குவங்கத்தில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது. இந்த சூழலில் மருத்துர்கள் போராட்டத்தை கைவிட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.