‘ஒரு நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்பித்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று கொண்டது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
நவீன் பட்நாயக் எடுத்த முடிவு:
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் சிலவற்றின் ஆதரவும் தேவைப்படுகிறது. இந்த திட்டம் உள்பட, பாஜக கொண்டு வந்த பல திட்டங்களுக்கு நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆதரவு தெரிவித்து வந்தது.
ஆனால், ஒடிசாவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்ததில் இருந்து, பாஜகவுக்கு நவீன் பட்நாயக் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்திலும் பிஜு ஜனதா தளம் தங்களுடைய நிலைபாட்டை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அக்கட்சியின் எம்பி சஸ்மித் பத்ரா கூறுகையில், "பிஜு ஜனதா தளம் முதலில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை ஆதரித்தது.
ஆனால், இந்த முழு ‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ இந்திய அரசு எப்படிப் பார்க்கிறது என்பதில் எனக்குக் கொஞ்சம் கவலையாக இருக்கிறது. இதை எப்படி அமல்படுத்த போகிறார்கள்? அதன் விதிகள் என்ன? அதை இன்னும் வெளியிடவில்லை.
தொங்கு சட்டசபை ஏற்பட்டாலோ, சட்டசபை அல்லது நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டாலோ என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நாளை அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டால் என்ன நடக்கும். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால் என்ன நடக்கும்?" என கேள்வி எழுப்பினார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ அமல்படுத்துவதில் சிக்கல்:
2014 முதல் பாஜக, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முன்மொழிந்து வருகிறது. மக்களவை தேர்தல் அறிக்கையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். கடந்த சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முன்னுரிமையாக உள்ள ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றார். அடிக்கடி நடத்தப்படும் தேர்தல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் பேசியிருந்தார்.
மேலும் தேசிய வளங்கள் சாமானியர்களுக்கு பயன்படுத்தப்படுவதை கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கனவை நனவாக்க முன்வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து இருந்தது. இந்தக் குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான தனது ஆய்வறிக்கயை அண்மையில் சமர்ப்பித்தது. அதில், முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதை தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.