சுகாதாரமற்ற மாஸ்க் அணிந்தால் கருப்புப் பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) நோய் வரக்கூடும் என எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் கூறியுள்ள கருத்தின் மீது பல்வேறு வாதவிவாதங்கள் எழுந்துள்ளன.

 


 

ஒடிசாவைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் பி.சரத் சந்திரா. இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் பேராசிரியாக இருக்கிறார். அவர் அண்மையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 2,3 வாரங்களுக்கு ஒரே மாஸ்க்கை உபயோகப்படுத்துவது கூட கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கலாம். என்95 (N95) ரக மாஸ்க்குகளை 5 முறை மட்டுமே பயன்படுத்தலாம். ஆனால், ஒரே மாஸ்க்கை திரும்பத் திரும்ப அணிவதன் மூலமும் கருப்புப் பூஞ்சை நோய் வரக்கூடும் எனக் கூறியிருந்தார். மேலும், கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் கொண்டோர், ஸ்டீராய்டுகள் பயன்படுத்துபவர், டோசிலிசுமாப் பயன்படுத்துபவர்கள், வெண்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகளுக்கு கருப்புப் பூஞ்சை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல், குளிரூட்டப்பட்ட ஆக்சிஜனை அப்படியே நோயாளிகளுக்கு செலுத்துவதும் கூட தொற்றை ஏற்படுத்தலாம் எனக் கூறினார்.

கருப்புப் பூஞ்சை அறிகுறிகள் என்னென்ன?

 


 

– கண்கள், மூக்கில் வலி மற்றும் சிவந்துவிடுதல் .

 

– லேசான காய்ச்சல் .

 

– எபிஸ்டாக்சிஸ் எனப்படும் மூக்கிலிருந்து ரத்தம் வழிதல் .

 

– தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், ரத்த வாந்தி, மனப்பதற்றம், குழப்பம், பார்வைக் குறைபாடு ஆகியன கருப்புப் பூஞ்சை நோயில் அறிகுறிகள் என மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

 


 

இப்படியான கருத்துகளால் ஏற்கெனவே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுடன் இப்போது கருப்புப் பூஞ்சை பற்றிய பயமும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. கருப்புப் பூஞ்சை பாதிப்பானது கொரோனாவிலிருந்து மீண்டவர்களை பெரிதும் தாக்குவதாக இதுவரை கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோயால் 400 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் இஎன்டி மருத்துவர் சுரேஷ் சிங் நருகா கூறும்போது, "சுகாதாரமற்ற மாஸ்குகளால் கருப்புப் பூஞ்சை நோய் வருகிறதா என்பது பற்றி இன்னும் அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. கட்டுப்பாடில்லாத ஸ்டீராய்டு பயன்பாடுதான் கருப்புப் பூஞ்சை நோய்க்கு முதல் காரணமாக நான் பார்க்கிறேன்.

அத்துடன், துவைக்காத முகக்கவசத்தை நீண்ட நேரம் பயன்படுத்துவதாலும், காற்றோட்டம் இல்லாத அறைகள், பேஸ்மென்ட் போன்ற இடங்களில் தொடர்ந்து இருப்பதாலும் இந்த நோயை ஏற்படுத்தலாம். 

 


 

மக்கள் கொரோனா அச்சத்தில் முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் துவைக்காமல் கூட அணிகின்றனர். ஈரப்பதம் மிக்க சுகாதாரமற்ற மாஸ்க்குகள் வழியே கருப்புப் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பின்னரும் முகக்கவசங்களைத் துவைத்துப் பயன்படுத்த வேண்டும். சுடு தண்ணீர், கிருமி நாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தவேண்டும்" எனக் கூறியுள்ளார்.