பதக்கத்தை வெல்லாவிட்டாலும் நாட்டு மக்களின் மனத்தை வென்ற வினேஷ் போகத், பாரீஸில் இருந்து நாடு திரும்பினார். டெல்லியில் அவரை சாக்ஷி மாலிக், பஜ்ரங் துனியா உள்ளிட்ட வீரர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். பொதுமக்கள் வினேஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தின் 50 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டி வரை சென்று அசத்திய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டி வரை சென்றபோதிலும், போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதே நேரம் அமெரிக்கா வீராங்கனை சாராவுக்கு தங்கமும், கியூபா வீராங்கனை லோபஸுக்கு வெள்ளிப் பதக்கமும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சுசாகி வெண்கலம் வென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.


மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு


இந்த சோகத்தில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் மற்றொரு சோகம் ஏற்பட்டது. மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். தொடர்ந்து வெள்ளிப் பதக்கம் கோரி அவர் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்புக்காக இவ்வளவு நாட்கள் வினேஷ் போகத் பாரீஸிலேயே தங்கி இருந்தார். தொடர்ந்து இன்று (ஆக.17) காலை இந்தியா திரும்பினார்.


டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் துனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் வினேஷுக்குக் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர்.


நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி


இதைக் கண்டு வினேஷ் போகத் உடைந்து அழுதார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்’’ என்று தெரிவித்தார்.  


 






100 கிராம் எடை அதிகரிப்பு காரணமாக, பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரின் பதக்கக் கனவு பறிபோன நிலையில், கோடிக்கணக்கான இந்திய மக்களின் மனங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.