கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 31 வயதான மருத்துவரான அவரை மருத்துவமனைக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் நாடு முழுவதும் ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் தொடங்கியது ஸ்டிரைக்:
இதையடுத்து, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் மர்மநபர்கள் புகுந்து போராட்டத்தை கலவரமாக மாற்றியதும், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதும் பெரும் பதற்றத்தை மேற்கு வங்கத்தில் ஏற்படுத்தியது.
மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, இன்று காலை முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தமானது நாளை காலை 6 மணி வரை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டிலும் வேலை நிறுத்தம்:
இந்திய மருத்துவ சங்கம் விடுத்த வேலை நிறுத்தத்திற்கு மற்ற மருத்துவ சங்கமும் ஆதரவு அளித்துள்ளன. நாட்டிலே மிகப்பெரிய மருத்துவ சங்கமான இந்திய மருத்துவ சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நாடு தழுவிய போராட்டத்தால் அத்தியாவசிய மருத்துவ பணிகளும், அவசர சிகிச்சை பிரிவுகளும் பாதிக்கப்படாது என்றும் ஏற்கனவே மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. அதேசமயம் புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்றும் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் புறநோயாளிகள் பிரிவு காலை 7.30 மணி முதல் 8.30 மணி முதல் செயல்படாது என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் கொல்கத்தா பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கேட்டு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.