பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்கும் வயதை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய சட்ட ஆணையத்துக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


16 வயதுக்கு மேற்பட்ட மைனர் சிறுமிகள் நிறைய பேர் காதலில் விழுந்து தான் விரும்பும் பையனுடன் பாலியல் உறவில் ஈடுபடும் வழக்கு போக்சோ வழக்காகப் பதிவாகி வருகின்றன. ஆரம்பத்தில் பெண் வீட்டிலோ, பையன் வீட்டிலோ போக்சோ வழக்கின் கீழ் புகார் அளிக்கப்பட விசாரணை முடிவதற்குள் இருவரும் திருமணமாகி குழந்தைகளைப் பெற்றுவிடுகின்றனர். எனவே பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்கும் வயதை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய சட்ட ஆணையத்துக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பரிந்துரைக்கிறது என்று நீதிபதிகள் சூரஜ் கோவிந்தராஜ், ஜி.பசவராஜா தெரிவித்துள்ளனர். 


16 வயது சிறுமியின் ஒப்புதலைக் கூட கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. 2017ல் ஒரு பையன் 17 வயது பெண்ணுடன் வீட்டைவிட்டுச் சென்று அவருடன் பாலியல் உறவிலும் இருந்துள்ளார். ஆனால் இப்போது இருவருக்கும் திருமணமாகிவிட்டது. குழந்தைகளும் உள்ளன. அதனால் அந்த ஆண் மீதான போக்சோ வழக்கு ரத்தாகியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு அந்த நபரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தது. ஆரம்பத்தில் பெண்ணின் பெற்றோர் போக்சோ வழக்கின் கீழ் புகார் செய்தனர். ஆனால் பின்னாளில் அத்தனை சாட்சிகளும் பிறழ்வாகின. 


சிறுவர்கள் இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபட அதிகக் காரணம் அவர்களுக்கு இதுபோன்ற சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே. எனவே சிறுவர்களுக்கு போக்சோ சட்டம், இந்திய தண்டனை சட்டம் தொடர்பான அடிப்படை விழிப்புணர்வையாவது ஏற்படுத்த வேண்டும். பல நேரங்களில் பாலியல் உறவில் ஈடுபடும் சிறுவனும், சிறுமியும் உறவினர்களாக அல்லது நன்கு அறிமுகமானவர்களாக இருந்து விடுகின்றனர். சட்டத்தைப் பற்றி தெரியாதது குற்றத்தை புரிந்ததற்கான சாக்காகிவிடக் கூடாது. ஆகையால் 9ஆம் வகுப்பு முதலான குழந்தைகளுக்கே போக்சோ சட்டம், அதன் கீழ் எவையெல்லாம் கிரிமினல் குற்றம் என்பனவற்றையெல்லாம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். எனவே கர்நாடக அரசுக்கும், சட்ட ஆணையத்திற்கும் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறது. மாநிலத்தின் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் இது தொடர்பான விழிப்புணர்வு கையேட்டை தயாரிக்க அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளுமே மாணவர்கள் மாணவிகள் மத்தியில் போக்சோ, பாலியல் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் என்ன தண்டனை போன்றவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது.


இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(pocso) Act 2012). இந்த சட்டம் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14-ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது.


இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.