டெல்லியில் தொடக்கப் பள்ளிகள் நவம்பர் 9 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.


டெல்லியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் டெல்லி தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும் அறிவிப்பை கோபால் ராய் வெளியிட்டுள்ளார். 


இதுகுறித்து அவர் கூறும்போது, ''முன்னதாக டெல்லியில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பெரிய வகுப்புகளுக்குத் திறந்தவெளியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. நவம்பர் 9 முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதேபோல திறந்தவெளி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கி கொள்ளப்படுகிறது'' என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். காற்று மாசு படிப்படியாகக் குறைந்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


என்ன காரணம்?


முன்னதாக டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அதனை சமாளிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது. அந்த வகையில் தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 5 முதல்  கால வரையறை இன்றி விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்டார்.




தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், சாலைகள், மின் பகிர்மான கட்டுமானங்கள், பைப்லைன் கட்டுமானங்களுக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டன. அதேபோல் டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்குமாறு கோரியது. பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் வாகனங்களை ஒற்றைப் படை, இரட்டைப் படை அடிப்படையில் இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. டெல்லியில் இன்று காலை நிலவரப்படி காற்று மாசு 400க்கும் அதிகமாக உள்ளது.


உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பான காற்றின் மாசு அளவை விட சுமார் 10 மடங்கு அதிகமாக மாசடைந்துள்ளது டெல்லி நகரம். இதன்  PM 2.5 அளவு சுமார் 107.6 என அளவிடப்பட்டுள்ளது.  PM 2.5 என்பது நுரையீரலிலும், பிற உறுப்புகளிலும் காற்று மூலமாக நுழையும் சிறிய துகள்கள் ஆகும். இவை நச்சுத்தன்மை கொண்டவை. 





அதிகப்படியான காற்று மாசு காரணமாக குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். அதாவது கருவுற்று இருக்கும் பெண்கள் மாசு அடைந்த காற்றை சுவாசிக்கும் போது அவர்களுக்குள் வளரும் குழந்தையை அது நேரடியாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது. அதாவது அந்த குழந்தையின் மூளை வளர்ச்சியில் சில தடைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.