குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையில் பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது என கேரள உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. 


குழந்தை பேறு விவகாரத்தில் பெண்களின் உரிமையை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்ட கேரள உயர் நீதிமன்றம், "இந்திய அரசியலமைப்புச் சட்டம், 21வது பிரிவின்படி, பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தின் ஒரு பரிமாணமாக குழந்தை பேரு உரிமை இருப்பதால், குழந்தையை பெற்று கொள்ள வேண்டுமா வேண்டாமா என தேர்வு செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு" என தெரிவித்தது.


சட்டப்பூர்வமாக, பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதையும், கேரள உயர்நீதிமன்றம் மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்துள்ளது. கருக்கலைப்பு, யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது. 


தனது வகுப்பை சேர்ந்தவருடன் பாலியல் உறவு மேற்கொண்டதால் உருவான கருவை கலைக்கக் கோரி 23 வயது எம்பிஏ மாணவி தொடர்ந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம், குழந்தை பேரு உரிமை குறித்து கருத்து தெரிவித்துள்ளது. கருத்தடை செயலிழப்பின் காரணமாக அவர் கர்ப்பமானார்.


மேலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தபோது தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் பிற உடல் உபாதைகள் குறித்து பரிசோதனை செய்து கொள்வதற்காக அவர் மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு, மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் ஸ்கேன் செய்து கொண்டார். அப்போதுதான், தான் கர்ப்பம் என அவருக்கு தெரிந்துள்ளது.


இருப்பினும், பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோயால் (பிசிஓடி) அவதிப்படுவதால், அந்த நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததற்கான எந்த அறிகுறிகள் தென்படவில்லை என்று அவர் கூறினார். பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோயால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.


தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகவும், மேலும் தனது துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்ததாகவும், அவருடன் பாலியல் உறவில் இருந்த காதலர், மேற்படிப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


கர்ப்பம் தொடர்ந்தால், மனஅழுத்தம் மற்றும் மனவேதனை அதிகரிக்கும் என, தான் நம்பியதால், கர்ப்பத்தை கலைக்க அவர் முடிவு செய்தார். குழந்தையைப் பெற்றெடுப்பது தன்னுடைய கல்வி மற்றும் வாழ்வாதாரத்தையும் சம்பாதிக்கும் திறனையும் பாதிக்கும் என்றும் மாணவி குறிப்பிட்டிருந்தார்.


இருப்பினும், கர்ப்பம் 24 வாரங்களைக் கடந்துவிட்டதால், எந்த மருத்துவமனையும் கருகலைப்பு செய்ய தயாராக இல்லை என்பதால் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.