கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 41 நாட்கள் விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் அனைத்து வயதினருடைய ஆண்களும், 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். என்னதான் நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என தெரிவித்தாலும் மக்களிடையே பெரும்பாலும் பழைய ஐதீகமே தொடர்கிறது. இப்படியான நிலையில் ஐயப்பனுக்கு கார்த்திகை - மார்கழி மாதம் தான் உகந்தது என்றாலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் குறிப்பிட்ட சில நாட்கள் சாமி தரிசம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.


அந்த வகையில்  புரட்டாசி மாத பூஜைக்காக கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி  சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது.இந்நிகழ்வில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இரவு வழக்கம் போல் 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில்,  முன்பதிவு செய்யாதவர்களும் சாமி  தரிசனம் செய்யும் வகையில் உடனடி முன்பதிவு செய்யும் ஏற்பாடுகள் நிலக்கல், பம்பையில் செய்யப்பட்டிந்தது.


எனவே வழக்கம்போல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில் சபரிமலையில் கிறிஸ்தவ பாதிரியார் சாமி தரிசனம் செய்த நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் பாலராமபுரம் அருகே உள்ள உச்சக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்.  இவர் ஆங்கிலிக்கன் (Anglican) சபை பாதிரியாராக உள்ளார்.  மனோஜ் தற்போது பெங்களூருவில் பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு சபரிமலை ஐயப்பன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு சாமி தரிசனம் செய்ய முடிவு செய்துள்ளார். 


இதற்காக 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி கோயில் செல்ல எண்ணினார். அதன்படி திருவனந்தபுரம் பகுதியில் உள்ள திருமலை மகாதேவர் கோயிலில் இருமுடி கட்டினார். அவருடன் 5 பேர் கொண்ட குழுவும் இணைந்தனர். தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்ய வந்த அவருக்கு பாதிரியார் மனோஜுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புரம் கோவில் மேல்சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் அவருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 


இதனைத் தொடர்ந்து செய்தியார்களை சந்தித்த பாதிரியார் மனோஜ், ‘இந்து மதம் குறித்து ஆழமாக தெரிந்து கொள்வது மட்டுமே எனது நோக்கம். மதம் மாறும் எண்ணம் இல்லை. இந்த சபரிமலை பயணம் என் மனதுக்கு மிகவும் இனிமையாக அமைந்தது’ என தெரிவித்தார்.  இதற்கிடையில் சபரிமலைக்கு சென்ற பாதிரியார் மனோஜ் மீது ஆங்கிலிக்கன் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் தேவாலயத்தில் திருப்பலி உள்ளிட்ட எந்த சடங்குகளையும் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் அடையாள அட்டையும் திரும்ப பெறப்பட்டுள்ளது.