தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதினார். 


முதலமைச்சர் முக ஸ்டாலினின் இந்த கடிதத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்தனர். 






இந்தநிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தொலைபேசி வாயிலாக தனது ஆதரவை கொடுத்ததாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநர்களுக்கு எதிரான எங்கள் முயற்சிகளுக்கு தனது ஒற்றுமையையும் பாராட்டையும் தெரிவிக்கும் வகையில் என்னுடன் தொலைபேசியில் பேசினார். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அனைத்து எதிர்க்கட்சி முதல்வர்களும் கூடி ஆலோசனை நடத்துமாறு தெரிவித்தார்” என பதிவிட்டு இருந்தார். இறுதியாக #தீ_பரவட்டும்! என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு இருந்தார். 


தனி தீர்மானம்:


கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில், தனித்தீர்மானம் மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். 


பாஜக ஆளாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தனித்தீர்மானம் குறித்தும், ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்திருந்தார்.