பில்கிஸ் பானோ வழக்கில் 11 குற்றவாளிகளும் முன் கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று குஜராத் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதிகள் கேஎம் ஜோசப், பிவி நாகரத்னா அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் குற்றவாளிகளை விடுவிக்கும் முன்னர் மாநில அரசு ஏன் குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கிடையில், மத்திய அரசும் குஜராத் அரசும் உச்சநீதிமன்றத்தில் மார்ச் 27ஆம் தேதியன்று, குற்றவாளிகளுக்கு விடுதலை அளிப்பது குறித்த அசல் கோப்புகளுடன் தயாராக இருக்குமாறு, அதன் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தன. பெஞ்ச் இப்போது இந்த விஷயத்தை மே 2 ஆம் தேதி விசாரிக்கும், மேலும் குஜராத் அரசு தாக்கல் செய்ய முன்மொழியப்பட்ட மறுஆய்வு மனு மீதும் முடிவெடுக்கும்.
அப்போது நீதிபதிகள் மாநில அரசின் முடிவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது என்ற காரணத்துக்காக மாநில அரசு தனது அறிவை உபயோகிக்காமல் முடிவெடுக்கக் கூடாது என்று தெரிவித்தது.
இப்போது கேள்வி என்னவென்றால் 11 பேரை விடுவித்ததில் மாநில அரசு அதன் சிந்தனையை செலுத்தியதா இல்லையா என்பதே. எதைவைத்து மாநில அரசு 11 பேரையும் விடுவித்தது? இன்று பில்கிஸ் பானோ பாதிக்கப்பட்டிருக்கலாம். நாளை அது நீங்களாகவோ நானாகவோ கூட இருக்கலாம். விடுதலைக்கான காரணத்தை நீங்கள் சொல்லாவிட்டால் நாங்கள் எங்கள் முடிவை எடுப்போம்.
ஆப்பிள்களை ஆரஞ்சுகளோடு ஒப்பிட முடியாது. அதுபோலத்தா ஒரு தனிப்பட்ட கொலையை படுகொலைகளுடன் ஒப்பிட முடியாது என்றது.
பில்கிஸ் பானோ வழக்கு:
கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதியன்று குஜராத் முதல்வராக மோடி பதவியேற்ற ஐந்தே மாதங்களில், உ.பி.யின் அயோத்தியிலிருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில், கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இதுதொடர்பாக மதக்கலவரம் ஏற்பட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தின்போது டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறொரு பகுதிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பில்கிஸ் பானுவுக்கு அப்போது 21 வயது ஆகியிருந்தது, 5 மாதம் கர்ப்பிணியாகவும் இருந்தார். அவருக்கு 3 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தையும் இருந்தது. பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்தின் 17 பேருடன் வேறு கிராமத்திற்கு புறப்பட்டபோது, மார்ச் 3-ம் தேதி, ஷபர்வாட் என்னும் கிராமத்தில் 20-30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை கொடூரமாக சுவற்றில் அடித்துக்கொன்றது அந்த கும்பல். கர்ப்பிணியான பில்கிஸ், அவரது அம்மா, உட்பட 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் 14 பேரை கொடூரமாக கொலை செய்தனர்.
தற்போது மீண்டும் இந்த பிரச்சனை தலைதூக்க காரணம் இதுதான்... பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்ததுதான். குற்றவாளிகளின் தண்டனை குறைப்பு குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்ததை தொடர்ந்து, 11 பேரை அந்த மாநில அரசு விடுவித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் இத்தீர்ப்பை எதிர்த்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.