ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி தான். அந்த நாளே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
குடியரசு தினம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அணிவகுப்புதான். பொதுவாக குடியரசு தின அணிவகுப்பு நாட்டின் ராணுவ வலிமையையும் கலாச்சார பன்முகத்தன்மையையும் பறைசாற்றும். அந்த வகையில், இந்தாண்டு நடந்த அணிவகுப்பில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றது.
ஏனெனில், புதுப்பிக்கப்பட்டு பெயர் மாற்றப்பட்ட கடமையின் பாதையில் (Kartavya Path) அணிவகுப்பு முதல்முறையாக நடத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து ராஜபாதை என்றழைக்கப்பட்டு வந்த இடத்திற்கு கடந்தாண்டு பிரதமர் மோடி கடமையின் பாதை என பெயர் மாற்றினார்.
அதேபோல, குடியரசு தின அணிவகுப்பில் முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 105 mm light field துப்பாக்கிகளை கொண்டு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
குடியரசு தின சிறப்பு விருந்தினராக முதல்முறையாக எகிப்து நாட்டை சேர்ந்த தலைவர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார். எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி கலந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக, குடியரசு தின அணிவகுப்பில் முதல்முறையாக எகிப்து நாட்டு ராணுவம் கலந்து கொண்டது.
குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவர் தலைமையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுவது கூடுதல் சிறப்பு.
அக்னிபாதை திட்டம் மூலம் ராணுவத்தில் சேர்ந்த வீரர்கள் முதல்முறையாக அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டகப்படை பிரிவில் முதல் முறையாக பெண் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். சோனல், நிஷா, பகவதி, அம்பிகா, குசும், பிரியங்கா, கௌசல்யா, காஜல், பாவனா, ஹினா ஆகியோர் ஓட்டகத்தில் அமர்ந்து ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
மத்திய ரிசர்வ் காவல் படையில் அனைத்து பெண்கள் படைப்பிரிவு முதல்முறையாக கலந்து கொள்கின்றனர். உதவி கமாண்டன்ட் பூனம் குப்தா தலைமையில் அனைத்து பெண்கள் படை பிரிவு கலந்து கொண்டது.
அணிவகுப்பு வரலாற்றில் முதல்முறையாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை கலந்து கொண்டது. போதைப்பொருள் பயன்பாடுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லி போலீஸ் பெண்கள் பைப் பேண்ட் பிரிவும் முதல்முறையாக ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டது.
இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றது.
அதன்படி ஆந்திரா, அசாம், உத்தரகாண்ட், திரிபுரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தது. மேலும் நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்று கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கு வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தமிழ்நாடு அரசு சார்பில் இந்தாண்டு பங்கேற்ற அலங்கார ஊர்தியில் சங்க காலம் முதல் இன்று வரை சமூக வளர்ச்சி, மேம்பாடு, சமூக மாற்றத்திற்கு பெண்கள் வழங்கிய பங்களிப்பு குறித்து அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆத்திச்சூடி இயற்றிய ஔவையார், வீர மங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் அலங்கார ஊர்தியின் முகப்பு பக்கத்தில் இடம் பெற்றது.