நாடு முழுவதும் இன்று 74ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.  


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி தான்.


இந்த நாளே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவதோடு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மத்திய அரசு சார்பில் குடியரசு தின விழா டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும்.


பொதுவாக ராஜபாதையில் நடத்தப்படும் குடியரசு தின அணிவகுப்பு நாட்டின் ராணுவ வலிமையையும் கலாச்சார பன்முகத்தன்மையையும் பறைசாற்றும். அந்த வகையில், இந்தாண்டு நடத்தப்படும் அணிவகுப்பு மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


ஏனெனில், புதுப்பிக்கப்பட்டு பெயர் மாற்றப்பட்ட கடமையின் பாதையில் (Kartavya Path) அணிவகுப்பு முதல்முறையாக நடத்தப்படுகிறது.


ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து ராஜபாதை என்றழைக்கப்பட்டு வந்த இடத்திற்கு கடந்தாண்டு பிரதமர் மோடி கடமையின் பாதை என பெயர் மாற்றினார். இது இந்தியா இந்தியா கேட் அருகில் அமைந்துள்ளது. 


குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவர் தலைமையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுவது கூடுதல் சிறப்பு. 


ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி கலந்து கொள்கிறார்.


இதனை முன்னிட்டு  அவர் முன்னதாகவே டெல்லிக்கு வருகை தந்துள்ளார். அவரது முன்னிலையில் எகிப்து நாட்டு படையினரும் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.


பிரமாண்ட அணிவகுப்பில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் 6 துறைகளின் அலங்கார ஊர்திகளும் பங்கேற்கவுள்ளது. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி சமூக மாற்றத்துக்கு உதவிய பெண்கள் வழங்கிய பங்களிப்பை பெண் தலைவர்களை மையப்படுத்தி  உருவாக்கப்பட்டுள்ளது.


மேலும் நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்று கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கு வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அதேசமயம் குடியரசு தின அணிவகுப்பின் இறுதியாக வீரர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 


விமான சாகசத்தில் 45 விமானங்கள் பங்கேற்கும் நிலையில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.