நாட்டின் குடியரசு தின விழா நாளை (26,ஜனவரி,2024) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
குடியரசு தின கொண்டாட்டம்:
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நாளை (26.01.2024) காலை டெல்லியில் நடக்கும் பிரம்மாண்ட குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மேக்ரான் ஜெய்ப்பூரில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்றிரவு (25.01.2024) 8.50 மணிக்கு தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு, முப்படை வீரர்களின் சாகசங்களும் நடைபெற உள்ளது. இன்று முதலே ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவின் பிரத்யேக கழுகு பார்வை காட்சிகள் தொலைக்காட்சி சேனல்களிலும், யூட்யூப் பக்கங்களிலும் ஒளிபரப்பு செய்யப்படும்.
எவ்வாறு பார்ப்பது?
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும். இதை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் மட்டுமின்றி தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டுகளிக்கலாம். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்பட உள்ளது. இந்திய அரசின் இணையதள பக்கமான https://indianrdc.mod.gov.in/ -என்ற இணையதளத்தில் சென்று இலவசமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை காணலாம். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வழங்கும் தளமான பி.ஐ.பி.யிலும் (PIB) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
கம்பீர அணிவகுப்பு
சாமானியர்களும் கண்டு களிக்கும் விதமாக மத்திய அரசு ஆமாந்த்ரன் என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த தளத்தில் குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்கலாம். குடியரசு தின விழாவில் பங்கேற்க நினைக்கும் பொதுமக்கள் தங்களுக்கான டிக்கெட்டுகளை அதற்கான பிரத்யேக இணையதளமான https://aamantran.mod.gov.in/login-என்ற இணையதளத்தில் சென்றும் பெறலாம்.
டிக்கெட் பெறுவது எப்படி?
- குடியரசு தின விழா அணிவகுப்பை நேரில் சென்று காண வேண்டுமென விரும்புபவர்கள் https://aamantran.mod.gov.in/login- என்ற இணைப்பை க்ளிக் செய்து டிக்கெட் பெற வேண்டும்.
- முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் உள்ளே செல்ல வேண்டும்.
- செல்போன் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
- பங்கேற்க உள்ள நிகழ்வின் விவரங்களை கேப்ட்சாவுடன் நிரப்ப வேண்டும்.
- ஒரு முறை மட்டுமே வரும் கடவுச்சொல் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
- அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- பின்பு இணையதளம் மூலமாக உங்களுடைய டிக்கெட் இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்படும்.