குடியரசு தினவிழா கொண்டாட்டம்


 ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா தனது 74-வது குடியரசு தின விழா கொண்டாட உள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும். 


இந்நாளில் பள்ளிகள், அலுவலகங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குடியரசு தின உரை ஒவ்வொரு பள்ளி, கல்லூரி அல்லது பிற நிறுவனங்களில் காணக்கூடிய பொதுவான விஷயங்கள் ஒன்று. மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் அன்றைய நாளில் குடியரசு தினத்தின் சிறப்புகளை பற்றி பேசுவார்கள். அதற்கான தலைப்புகளை தேடுவதற்கு முன் சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். அதனை பற்றி கீழே காணலாம்.


ஆங்கிலேயர்கள் ஏன் வந்தார்கள்:


ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியாவிற்கு வருகின்ற காலத்தில், அதாவது 16-வது நூற்றாண்டுகளில், இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளை முகலாயர்கள் ஆட்சி செய்து வந்தனர். குறிப்பாக 1526-ஆம் ஆண்டு முதல் 1857 ஆம் ஆண்டு வரை முகலாயர்களின் ஆட்சி இருந்தது. முகலாயர்களின் ஆட்சியை தோற்றுவித்தவர் பாபர். முகலாயர்களில் வலிமை வாய்ந்த அரசர்களாக பாபர், அக்பர் மற்றும் ஔரங்கசீப் கருதப்படுகிறார்கள்.


சரி, நாம் முக்கிய கருத்திற்கு வருவோம். ஆங்கிலேயர்கள், ஏன் இந்தியாவிற்கு வந்தனர் என தெரிந்துகொள்வோம். புவியியல் அடிப்படையில், ஐரோப்பா கண்டமானது வட அரைக்கோளத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. அதனால் அப்பகுதியில் பெரும்பாலும் குளிர்காலமே நிலவும். எனவே அந்த நிலப்பகுதியானது, குறைந்த காலத்திற்கு மட்டுமே விவசாயத்திற்கு ஏற்றதாக இருந்தது. இதனால், அவர்களுக்கு பருத்தி, பட்டு, மசாலா பொருட்கள் அதிகம் தேவைப்பட்டது. அதற்காகத்தான், அவர்கள் இந்தியா வந்தடைந்தனர்.


குடியரசு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?


இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. ஆனால் இந்தியாவுக்கென்று அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்படவில்லை. இந்திய தலைவர்கள் அடங்கிய அரசியல் நிர்ணய சபையானது, அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கும் பணியை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வந்தது. 


இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது நவம்பர் 26 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையால்  ஒப்புதல் பெறப்பட்டது. அதையடுத்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. வெளிநாட்டவர்கள் தலையீடின்றி இந்தியாவுக்கு என்று ஒரு சட்டம்  நடைமுறைக்கு வந்த நாளே குடியரசு தின விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளுக்காக போராடிய சிலறை பற்றி பார்ப்போம்.


பாடல்கள் மூலம் சுதந்திர வேட்கையை தூண்டியவர்கள்



மகாகவி பாரதியார்



 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாகவி பாரதியார், கவிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். தேசபக்தி, பக்தி மற்றும் ஆன்மீகம் குறித்த பல  பாடல்களை  இயற்றியுள்ளார். இந்திய சுதந்திர இயக்கம், தேசபக்தி, தேசியவாதம் தொடர்பாக பல பாடல்களை இயற்றியதால், அவர் ஒரு தேசிய கவிஞராகக் கருதப்பட்டார். சுதந்திர இந்தியாவுக்கான தனது தொலைநோக்கு பார்வையையும், தனது பாடல்களில் கோடிட்டுக் காட்டினார்.

சரோஜினி நாயுடு :


கவிக் குயில் என அழைக்கப்படும் சரோஜினி நாயுடு,1879 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் வங்காளத்தில் பிறந்தார்.சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், கவிஞராகவும் எழுத்தாளராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும், சமூக ஆர்வலராகவும் திகழ்ந்தார். கவி வல்லமை படைத்தவர்  என்பதால் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படுகிறார்.




1905 ஆம் ஆண்டு வங்காளத்தை, ஆங்கிலேயர்கள் இரண்டாக பிரித்ததை  எதிர்த்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட சரோஜினி நாயுடு, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் , உப்புச் சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டார். உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் காந்தி தண்டி கடற்கரையில் எடுக்கப்பட்ட உப்பை சரோஜினி நாயுடுவின் கையில் கொடுத்தார். அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக 21 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் கிடைத்த பின் உத்தர பிரதேசத்தின் ஆளுநராக  பொறுப்பேற்றார். சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் பெற்றார். அவரை போற்றும் வகையில், அவரின் பிறந்த நாள் இந்தியாவின் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.


இதுபோன்று, ஷியாம்லால் குப்தா, ஹஸ்ரத் மோகனி உள்ளிட்டோர் பாடல்கள் மூலம் சுதந்திர வேட்கையை தூண்டியவர்கள் ஆகும். இவர்கள் தலைப்பில் குடியரசு தினவிழா பேச்சு போட்டியில் பேசலாம் அல்லது ஒவ்வொரு தலைவர்களும் சுதந்திரத்திற்கு எவ்வாறு பாடுபட்டார்கள் அவர்களின் சிறப்புகளை நினைவுக் கூறும் வகையில் தலைப்புகளை தேர்தெடுத்து பேசலாம்.