டெல்லியில் நடைபெற்ற 74வது குடியரசு தின விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி மரியாதை செலுத்தினார். 


நாடு முழுவதும் 74வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 தேதி தான். அந்த நாளே குடியரசு தினமாகும். 


மத்திய அரசு சார்பில் குடியரசு தின விழா டெல்லியில் உள்ள சென்டிரஸ் விஸ்டா திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (ராஜபாதை) கொண்டாடப்பட்டது. முன்னதாக இந்த விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று 2 நிமிட மவுன அஞ்சலியுடன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்று வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 






தொடர்ந்து கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ள கடமையின் பாதை அருகே பிரதமர் மோடி வருகை தந்தார். குதிரைப்படை வீரர்கள் சூழ காரில் கொடியேற்றும் இடத்திற்கு வருகை தந்த திரௌபதி முர்மு, குடியரசு தலைவராக பொறுப்பேற்றப் பின் முதல்முறையாக குடியரசு தினத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.அதைத் தொடர்ந்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. 


பின்னர் உள்நாட்டு திறன், பெண்களின் வலிமை, ராணுவத்திறன், பன்முகத்தன்மை ஆகியவற்றை பிரதிபலிக்கும் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. தேசபக்தி இசை முழங்க ராணுவத்தின் பல பிரிவுகள் அணிவகுப்பு நடத்தினர். இந்த அணி வகுப்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகளும், தகவல் தொடர்பு சாதனங்களும் இடம் பெற்றது.


இதனையடுத்து மாநில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் 6 துறைகளின் அலங்கார ஊர்திகளும் பங்கேற்றது. இதில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி சமூக மாற்றத்துக்கு பங்களிப்பை வழங்கிய பெண் தலைவர்களை மையப்படுத்தி  உருவாக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி கலந்து கொண்டுள்ளார்.