PM Narendra Modi Republic Day Costume: 73 வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படைகள் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், உலகெங்கிலும் இருந்து இந்திய மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், இன்று பிரதமர் மோடி அணிந்திருந்த தொப்பியும், துண்டும் பலரது கவனத்தை பெற்றிருக்கிறது.
வழக்கமாக, முக்கிய நிகழ்வுகளுக்கு தலைப்பாகை அணிந்து வரும் பிரதமர், இம்முறை அணியவில்லை. அதற்கு பதிலாக, உத்தரகண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியும், மணிப்பூர் மாநிலத்தின் துண்டும் அணிந்து பிரதமர் மோடி இன்று குடியரசு விழாவில் கலந்து கொண்டார். ஐந்து மாநில தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மணிப்பூர், உத்தர்கண்ட் மாநிலங்களும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மகமல் தொப்பி:
உத்தரகண்ட் மாநிலத்தின் மலர் என்ற குறிப்பிடப்படும் ‘பிரம்மகமல்’ இமயமலையில் அதிகமாக காணப்படுகிறது. பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்கு சென்று பூஜை செய்யும் போதெல்லாம் இந்த மலரை வைத்து பூஜை செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று, குடியரசு தின விழாவில் அவர் அணிந்திருந்த தொப்பியில் இந்த மலர் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
லெய்ரம் ஃபி துண்டு:
பிரதமர் மோடி பிரத்யேகமான டிசைனில் தயாரிக்கப்பட்ட துண்டை அணிவது முதல் முறை அல்ல. இருப்பினும், இன்று அவர் அணிந்திருந்த துண்டு பார்வையாளர்களின் கவனத்தை பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட சிறப்பு வகை துண்டுதான் இந்த லெய்ரம் ஃபி துண்டு.
உத்தரகண்ட் மாநிலத்தின் பாரம்பரியத்தில் உருவான தொப்பியை அணிந்தற்கு, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதே போல, மணிப்பூர் மாநில அமைச்சர், பாஜகவைச் சேர்ந்த பிஸ்வஜித் சிங் தனது நன்றியை பதிவு செய்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்