காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் தெற்கு டெல்லியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் வீட்டிற்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 அறைகள் கொண்ட இந்த வீடானது டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் குடும்பத்திற்கு சொந்தமானது என்றும், தற்போது அவர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் அங்கு வசித்து வருகிறார். 


கிடைத்த தகவலின்படி, ராகுல் காந்தி  தற்போது சந்தீப் தீட்சித் வசித்த வீட்டிற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், ராகுல் காந்திக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புக்கான ஒப்புதலுக்கு பிறகு இது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். தற்போது, சந்தீப் தீட்சித் தனது குடும்பத்தினருடன் ஒரு பிளாட்க்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது.


கடந்த 2019 ம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ராகுல் காந்திக்கு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த மார்ச் 23ம் தேதி தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் காரணமாக, ராகுல் காந்தி ஒரே மாதத்தில் தான் வசித்து வந்த அரசாங்க பங்களாவில் இருந்து காலி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. 


அப்போது ராகுல் காந்தி, “இந்திய மக்கள் இந்த வீட்டை எனக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இன்று உண்மையை பேசுவதற்காக ஒரு விலை எனக்கு கிடைத்துள்ளது. உண்மையை பேசுவதற்காக இப்படியான சூழ்நிலை எனக்கு கிடைத்தாலும் பரவாயில்லை. தொடர்ந்து பேசுவேன்” என்று தெரிவித்தார். 


கடந்த வாரம் குஜராத் உயர்நீதிமன்றம் சூரத் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. ராகுல் காந்தியின் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


யார் இந்த ஷீலா தீட்சித்..?


ஷீலா தீட்சித் கடந்த 1991 ம் ஆண்டு நிஜாமுதீன் ஈஸ்ட் வீட்டை வாங்கினார்.  அதன்பிறகு 1998 முதல் 2013 வரை டெல்லி முதலமைச்சராகவும், 2014 ஆம் ஆண்டில் கேரளாவின் ஆளுநராகவும் இருந்தார்


தொடர்ந்து, டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் கேரள ஆளுநராக இருந்த பிறகு நிஜாமுதீன் ஈஸ்ட் இல்லத்திற்கு குடிபெயர்ந்த ஷீலா தீட்சித்  இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் ஷீலா தீக்ஷித் இறந்தபோது அவரது வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க ராகுல் காந்தி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.