இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி ஶ்ரீபெரும்பதூரில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திரா காந்தியின் மறைவிற்கு பிறகு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி பெரிய ஆளுமையாக பார்க்கப்பட்டார். அவருடைய காலத்தில் பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டது. மேலும் பல முக்கியமான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அவருடைய ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டன. அவருடைய நினைவு நாளில் அந்த வரலாற்றை சற்று திரும்பி பார்ப்போம்.


1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்ட போது அன்று இரவு இந்தியாவின் புதிய பிரதமராக ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டார். அப்போது இந்திரா காந்தியை சீக்கியர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்ததால் இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. அந்த சமயத்தில் நவம்பர் 2ஆம் தேதி ரேடியோ மூலம் இந்த வன்முறையை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்பின்னர் வன்முறை சற்று அடங்கியது. 


போபால் நச்சு வாயு கசிவு:


மீண்டும் டிசம்பர் மாதத்தில் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியில் நச்சு தன்மை உடைய வாயு வெளியேறி பெரியளவில் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை யூனியன் கார்பைடு நிறுவனம் இந்தியாவில் நடத்தாமல் வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டது. அப்போது ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு போபால் வாயு கசிவு தொடர்பான பேரிடர் சட்டத்தை நிறைவேற்றியது. அதன்மூலம் வெளிநாடுகளில் வழக்கு நடந்தால் அதை இந்திய அரசு எடுத்து நடத்தும் என்று அறிவித்தது. அத்துடன் வழக்குகளை இந்தியாவிற்கு மாற்ற முயற்சி எடுத்து அதில் ராஜீவ் அரசு வெற்றியும் பெற்றது. இறுதியில் யூனியன் கார்பைடு நிறுவனம் இந்திய அரசுக்கு 470 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக கொடுத்தது. இதை இந்திய அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தது. 




மாநிலங்களின் பிரச்னைக்கு தீர்வு:


1985ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனால் மீண்டும் இந்திய பிரதமராக ராஜீவ் காந்தி பதவி ஏற்றார். அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்ற போது சில மாநிலங்களில் பிரச்னைகள் மிகவும் அதிகமாக இருந்தன. அதையும் தனது ஆளுமையால் சிறப்பாக சரி செய்தார். 


பஞ்சாப் மாநிலத்தில் இருந்த பிரச்னையை போக்க அக்காலி தளம் தலைவருடன் 1985ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தை செய்தார். அந்த தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் மீண்டும் பிரச்னை தலையெடுத்தது. அப்போது அபிரேஷன் பிளாக் தண்டர் என்பதன் மூலம் மீண்டும் சீக்கிய பொற்கோவில் உள்பட பல இடங்களில் மீண்டும் அமைதி நிலவ வழிவகை செய்தார். 


அசாம் மாநிலத்தில் 1970கள் முதல் நீண்ட நாட்கள்  பெரிய அளவில் போராட்டம் வெடித்து கொண்டிருந்தது. இதை சரி செய்ய 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அசாம் மாணவர் அமைப்புடன் அமைதிக்கான ஒப்பந்ததை இந்திய அரசு செய்தது. அதன்பின்னர் அங்கு இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விளக்கி கொள்ளப்பட்டது. 


மிசோரம்  பகுதியிலும் இந்திய அரசுக்கு எதிராக மிசோ அமைப்பு ஆயுதங்களுடன் போராடி வந்தது. இந்தப் போராட்டத்தையும் இந்திய அரசு 1986ல் ஒப்பந்தம் மூலம் முடிவு கொண்டு வந்தது. மேலும் மிசோ அமைப்பினரை ஆயுதங்களை கைவிட செய்ய வைத்தது. 1987ஆம் ஆண்டு இந்தியாவின் 23ஆவது மாநிலமாக மிசோரம் உருவானது.


இதேபோல் திரிபுரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளிலும் ஏற்பட்டிருந்த பிரச்னைகள ராஜீவ் காந்தி அரசு சிறப்பாக கையாண்டது. 


இவை தவிர ராஜீவ் காந்தி தனது ஆட்சி காலத்தின் போது நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை மற்றும் ஊழல் அல்லாத நிர்வாகத்தை தர முயன்றார். இதற்காக சில சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.


கட்சி தாவல் தடை சட்டம்:


1985ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றவுடன் முதல் சட்டமாக கட்சி தாவல் தடை சட்டத்தை நிறைவேற்றினார். இதன்மூலம் எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் பணம் பெற்று கட்சி தாவம் முறையை தடுக்க வேண்டும் என கூறி சட்டத்தை நிறைவேற்றினார். 


சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்:


போபால் நச்சு வாயு கசிவிற்கு பிறகு சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல குரல்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு 1986ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. மேலும் மத்திய அரசில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தனியாக உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக இந்திய அரசுக்கு நிறையே அதிகாரம் கிடைத்தது. 


உள்ளாட்சி சட்டம் வடிவு:


கிராமங்கள் மற்றும் நகர் புறங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என்று ராஜீவ் காந்தி கவலை கொண்டார். இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டாயம் தேர்தல் நடத்த வேண்டும் என்ற முன்னெடுப்பை எடுத்தார். இதற்கான சட்ட மசோதாவையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். எனினும் இவருடைய ஆட்சி காலத்தில் அது நிறைவேற்றப்படவில்லை. 




தொழில்நுட்பம் திட்டங்கள்:


பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் 6 முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது இந்தியாவின் வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய கருவியாக பார்க்கப்பட்டது. குடிநீர் தொடர்பான திட்டங்களை செயற்கைகோள்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களுடன் இணைக்கப்பட்டன. முக்கியமாக தொலைத் தொடர்பு துறைக்கு அவர் அதிக கவனம் அளித்தார். தொலைத்தொடர்பு ஆணையத்தை அமைத்தார். அதன்பின்னர் மகாநகர் தொலைத் தொடர்பு லிமிடேட் என்ற மத்திய அரசு நிறுவனத்தையும் தொடங்கினார். 


அரசு அலுவலகங்களில் கணினி பயன்பாடு:


ராஜீவ் காந்தியின் அரசு இந்தியாவில் கணினி பயன்பாட்டை ஊக்குவித்தது. இவருடைய ஆட்சிக் காலத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் கணினி பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் கணினி தயாரிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்தியா தொழில்நுட்ப துறையில் பெரிய சக்தியாக உருவெடுக்க ராஜீவ் காந்தி அப்போதே விதையிட்டவர். 


புதிய கல்விக்கொள்கை:


இந்திரா காந்தி அரசு 1968ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கல்வி கொள்கையை கொண்டு வந்தது. அதன்பின்னர் மீண்டும் இந்தியாவில் கல்வி கொள்கையை ராஜீவ் காந்தி அரசு சீரமைத்து 1986ல் புதிய கல்வி கொள்கையை வெளியிட்டது. இந்தப் புதிய கொள்கையின் மூலம் இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. அத்துடன் மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி இக்கொள்கையின் மூலம் வந்தது. மேலும் ஆபிரேஷ் பிளாக்போர்டு என்ற திட்டத்தின் மூலம் பள்ளிகளின் தரம் மற்றும் கட்டுமானங்களை  உயர்த்த திட்டமிட்டப்பட்டது.  இவை தவிர இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகமும் உருவாக்கப்பட்டது. 


இத்தனை சரியான விஷயங்களை செய்தாலும் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் சில தவறுகளும் நடைபெற்றன. போஃபர்ஸ் முறைகேடு வழக்கு, 1987ஆம் ஆண்டு வறட்சியை கையாண்ட விதம் மற்றும் இலங்கையுடன் ராஜீவ் காந்தி அரசு செய்த ஒப்பந்தம் ஆகிய அனைத்து ராஜீவ் காந்தி அரசுக்கு பெரிய கருப்பு புள்ளிகளாக மாறின. இதில் இலங்கையுடன் ராஜீவ் காந்தி செய்த ஒப்பந்தம் மிகவும் தவறான முடிவாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக தான் 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.