Reliance Industries: ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு பிரிவுகள் தொடர்ந்து, செழித்து வளர்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழும வருவாய் விவரம்:
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமயிலான, ரிலையன்ஸ் குழுமம் தனது 3வது காலாண்டின் வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் அந்த குழுமத்தின் நிகர லாபம் 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக எண்ணெய் வணிகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவுகளின் நிலையான வளர்ச்சியின் மூலம் ஈடுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.17,265 கோடி அல்லது ஒரு பங்கின் ரூ.25.52 ஆக உள்ளது. இதேகாலகட்டத்தில் கடந்த ஆண்டில் அந்த நிறுவனம் ஈட்டிய ரூ.15,792 கோடியை விட இது 9.3 சதவீதம் அதிகமாகும். அதாவது கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலகட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு பங்கின் விலை ரூ.23.19 ஆக மட்டுமே இருந்ததே குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் துறையில் ஏற்பட்ட சரிவு:
முகேஷ் அம்பானி தலைமையிலான குழுமத்தின் ஆண்டு வணிக நடவடிக்கைகளின் மொத்த வருவாய் கிட்டத்தட்ட ரூ.2.2 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், எண்ணெய் மற்றும் ரசாயனப் பிரிவின் வருவாய் 2.4 சதவீதம் சரிந்துள்ளது. அதன் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தில் யூனிட்களின் திட்டமிட்ட பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளுக்கான் உற்பத்தி நிறுத்தத்தால் எண்ணெய் உற்பத்தி மற்றும் லாபம் பாதித்ததாக ரிலையன்ஸ் குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் குழும பங்குகளின் மதிப்பு 0.01 சதவீதம் உயர்ந்து ரூ.2,735.05 ஆக முடிந்தது.
சில்லறை வணிகம் எப்படி?
ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை பிரிவின் மூன்றாவது காலாண்டில், அதன் நிகர லாபம் 31.87 சதவீதம் உயர்ந்து ரூ. 3,165 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் அதன் செயல்பாடுகளின் வருவாய் 23.75 சதவீதம் அதிகரித்து ரூ.74,373 கோடியாக உள்ளது. இதில் மளிகை, ஃபேஷன் & லைஃப் ஸ்டைல் மற்றும் மின்சாதன பொருட்களின் விற்பனை முக்கிய பங்கு வகிக்கின்றன. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவின், நிகர லாபம் 2,400 கோடி ரூபாயாகவும், மொத்த வருவாய் 67 ஆயிரத்து 623 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், நடப்பு டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் மொத்த வருவாய் 22.83 சதவீதம் அதிகரித்து ரூ.83,063 கோடியாக உள்ளது.
லாபம் ஈட்டி தரும் ஜியோ:
இதனிடையே, ஜியோ குழுமத்தின் தொலைதொடர்பு பிரிவான ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில் 12.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,208 கோடியாக பதிவாகியுள்ளது. டெலிகாம் பிரிவின் நிகர லாபம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.4,638 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் வருவாய் 10.3 சதவீதம் அதிகரித்து, மூன்றாவது காலாண்டில் ரூ.25,368 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அந்த பிரிவின் வருவாய் ரூ.22,998 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதன் வருவாய் 10.3 சதவீதம் உயர்ந்துள்ளது.