தெற்கு மும்பையில் உள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு புதன்கிழமை அன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து, அங்கு வெடிகுண்டு வெடிக்க போவதாக மிரட்டியுள்ளார்.


இதுகுறித்து காவல்துறை தரப்பு, "அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


 






அந்த நபர் மதியம் 12.57 மணிக்கு மருத்துவமனையின் லேண்ட்லைன் எண்ணுக்கு போன் செய்தார். அடையாளம் தெரியாத நபர் மீது டிபி மார்க் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என குறிப்பிட்டுள்ளது
 
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மருத்துவமனைக்கு போன் செய்து தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நகைக்கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


பிப்ரவரி 2021இல், தெற்கு மும்பையில் அமைந்துள்ள அம்பானியின் இல்லமான 'ஆண்டிலியா' அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட எஸ்யூவி வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) நிறுவனர் முகேஷ் அம்பானி. இவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த ஒருவரை மும்பை போலீசார் ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்தனர்.


ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை மும்பை கிர்கானில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் லேண்ட்லைன் எண்ணுக்கு அப்சல் என்ற நபர் அழைத்து முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்தார். 


 






அவர் மூன்று முதல் நான்கு தடவை வரை போன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை போலீசார் அடையாளம் கண்டதை அடுத்து சந்தேக நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


முதற்கட்ட விசாரணையில் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரியவந்துள்ளது. தற்போது வழக்கு பதிவு செய்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.