ரிலையன்ஸ் கன்ஸ்யூமுமர் இண்டஸ்ட்ரீஸ் அண்மையில் கேம்பா கோலா என்ற பானத்தை திரும்பவும் இந்திய சந்தைகளில் கொண்டுவருவதாக அறிவித்து அதை செயல்படுத்தியது. இந்நிலையில் தற்போது அமுல், மதர் டெய்ரி ஐஸ்க்ரீம்களுக்குப் போட்டியாக ஐஸ்க்ரீம் தயாரிப்பையும் அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் இண்டிபெண்டன்ஸ் ( Independence) என்ற பிராண்ட் பெயரின் கீழ் இந்த ஐஸ்க்ரீம் தயாரிப்பில் இறங்கவுள்ளது. குஜராத்தில் இது தொடங்கவுள்ளது. அங்குள்ள ஐஸ்க்ரீம் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்க்கவுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸானது நேரடியாக அமுல், மதர் டெய்ரி நிறுவனங்களுடன் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ரிலையன்ஸ் நிறுவனத்தில் டாப் ஆர்டர் பணிகளில் அண்மையில் நியமிக்கப்பட்ட நபர்கள் இந்தத் திட்டத்தை முன்னெடுத்து பால் சந்தையில் ஒரு தனி இடத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் பெற்றுத் தருவார்கள் எனத் தெரிகிறது.
அமுல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ரூபீந்தர் சிங் சொதி அண்மையில் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வென்சூர்ஸ் லிமிடட் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இவர் குஜராத் கூட்டுறவு பால் விற்பனையாளர்கள் கூட்டமைப்பிலும் வேலை செய்துள்ளது. 41 ஆண்டுகள் பணியாற்றிய அவர் அமுல் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றியவர். இந்நிலையில் கடந்த ஜனவரியில் ஆர்.எஸ்.சொதி தனது பணியை ராஜினாமா செய்தார். அவர் ரிலையன்ஸ் மளிகைப் பொருட்கள் நிறுவனத்தை கவனிப்பார் என்று கூறப்பட்டது.
ஆர்.எஸ்.சொதியைத் தவிர ரிலையன்ஸ் நிறுவன சந்தீபன் கோஷ் என்ற நபரை ரிலையன்ஸ் ரீட்டைல் நிறுவனத்தின் டெய்ரி மற்றும் ஃப்ரோசன் ஃபுட்ஸ் பிரிவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மில்க் மந்த்ரா மற்றும் லாக்டாலிஸ் இண்டியா நிறுவனங்களில் பணியாற்றியவராவார்.
இரண்டாவது இன்னிங்ஸ்:
பால் மற்றும் பால் சார்ந்த தொழிலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கெனவே இந்நிறுவனம் 2016ல் டெய்ரி தொழிலை ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்திடம் விற்றுவிட்டு வெளியேறியது. ஆனால் தற்போது இந்தியாவில் பால் பொருட்கள் தொழில் மீண்டும் வேகமெடுப்பதால் அதனை ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் கையிலெடுத்திருக்கிறது.
அண்மையில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கேம்ப கோலாவை அறிமுகப்படுத்தியது. ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள், எஃப்எம்சிஜி பிரிவு மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸின் துணை நிறுவனத்தின் கீழ் காம்பா உள்ளது. அதேபோல் வீட்டுப் பராமரிப்பு பொருட்கள் சந்தையிலும் இறங்கியுள்ளது. இவற்றை 30 முதல் 35 சதவீதம் சலுகை விலையில் வழங்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. இனி ஐஸ்க்ரீம் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இண்டிபெண்டன்ஸ் பிராண்ட் புரட்சியை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.