எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். 


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.ஆனார். அடுத்தாண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் சமீபத்தில் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம்  செய்யப்பட்டார். 


பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம்  மார்ச் 23 ஆம் தேதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதற்கு மறுநாளே ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதி முற்றிலுமாக முடங்கி போனதற்கு ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் அமளி செய்ததும் ஒரு காரணமாக அமைந்தது.


இந்நிலையில் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதிக்கு சென்றார். அங்கு கல்பெட்டா நகரில் நடந்த 'சத்யமேவ ஜெயதே' என்னும் பேரணியில் இருவரும் கலந்து கொண்டனர். இந்த சாலை பேரணியில் காங்கிரஸ் கட்சியின் கொடிகளுக்கு பதிலாக நூற்றுக்கணக்கான  தொண்டர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு உடன் சென்றனர். 


இதனைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது, “நாடாளுமன்ற உறுப்பினர் என்பது பெயருக்கு பின் வரும் சாதாரணமான ஒரு தகுதி தான். எனது எம்.பி. பதவியை பறிக்கலாம். ஆனால் மக்கள் பிரதிநிதியாக நான் தொடருவதை பாஜகவால் தடுக்க முடியாது. இந்த வயநாடு மக்களுக்கு என்ன தேவை என்பதற்காக போராடுபவன் தான் மக்கள் பிரதிநிதி. நான் வயநாட்டை சேர்ந்தவன் இல்லை என்ற போதிலும் மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக கருதுகிறார்கள். சுதந்திரமான நாட்டில் வாழ வேண்டும் என்பதே இந்திய மக்களின் நோக்கமாகும். ஒவ்வொரு சிறிய சமூகத்தினரையும், மதத்தினரையும் மதிப்பவன் நான். தற்போது நடப்பது இருவித சமூக கண்ணோட்டங்களுக்குன் இடையேயான மோதலாகும். 


நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் வயநாடு மக்களுக்காக போராடுவேன்.  என் பதவியை பறித்தாலும் இந்த தொகுதி மக்களுடனான உறவை பறிக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக போராடுவேன்” என தெரிவித்தார். மேலும், “நாடாளுமன்றம் சென்று இருந்த போது அதானி குறித்து சில கேள்விகளை கேட்டேன். முதல்முறையாக நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அரசே செயல்பட்டதை பார்த்தேன். பாஜக மக்களை பிளவுப்படுத்துவதோடு, மோதலையும் உருவாக்குகிறது. பாஜகவை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்” என ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.