மேற்கு வங்கம் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்கத்திற்கு செல்லும்போது அவர்களின் கார்களும் தாக்கப்பட்டுவருகிறது. 


இந்நிலையில் 2016-ஆம் ஆண்டு நாரதா வழக்கு தொடர்பாக இன்று காலை 2 திரிணாமுல் அமைச்சர்கள் உட்பட 4 எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை சிபிஐ கைது செய்து விசாரிக்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது. இவர்களை உரிய அனுமதி பெறாமல் சிபிஐ கைது செய்துவிட்டதாக கூறி முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சிபிஐ அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 6 மணிநேரம் வரை நடைபெற்ற இந்த தர்ணாவின் போது கொல்கத்தா சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே அதிகளவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அத்துடன் அவர்கள் சிபிஐ வளாகத்தின் பாதுகாப்பு காவலர்கள் மீது கற்களை எரிந்து தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவானது. 




இறுதியில் இந்த முறையற்ற கைதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அக்கட்சியின் வழக்கறிஞர் கல்யாண் பானர்ஜி, "இந்த நான்கு பேரை சட்டவிரோதமாக சிபிஐ கைது செய்துள்ளது. சபாநாயகர் இருக்கும் போது அவரிடம் முறையாக அனுமதி பெறாமல் இவர்களை கைது செய்தது தவறு. இது பாஜகவின் அரசியல் நடவடிக்கை. இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் முறையிடுவோம். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 2017ல் இவர்கள் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். அப்படி இருக்கும் போது தற்போது எப்படி கைது செய்யமுடியும்" எனத் தெரிவித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நாரதா செய்தி இணையதளத்தில் ஒரு கள ஆய்வு வீடியோ வெளியானது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் சிலர் போலியான நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றது தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதில் ஃபிர்ஹாத் ஹக்கிம், சுபர்தா முகர்ஜி, மதன் மித்ரா மற்றும் முன்னாள் கொல்கத்தா மேயர் சோவன் செட்டர்ஜி உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.  மேலும் இந்த வழக்கில் சுவந்து அதிகாரி மற்றும் முகுல் ராய் ஆகிய இருவரும் தொடர்புபடுத்தப்பட்டிருந்தனர். 




எனினும் அவர்கள் இருவரும் தற்போது திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் மீது தற்போது சிபிஐ எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சிபிஐயின் இந்தச் செயலை வண்மையாக கண்டித்துள்ளனர். முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு சாரதா சிட் மோசடி வழக்கில் முன்னாள் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமாரை சிபிஐ கைதுசெய்ய முற்பட்டது. அப்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் சிபிஐ அலுவலகத்திற்கு சென்று அவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.