நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக அவற்றில் சில மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியது. ஏனென்றால், அவை எதுவுமே அறிவியல் சார்ந்த நடவடிக்கைகளாக இருக்கவில்லை. அவ்வாறு அறிவியல் சாராமல் சர்ச்சைக்கு உள்ளாகி விமர்சிக்கப்பட்ட 5 நடவடிக்கைகள் என்னென்ன?


கோ கொரோனா கோ கொரோனா டூ நோ கொரோனா நோ கொரோனா:




கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கோ கொரோனா கோ கொரோனா என்ற முழக்கத்தை தெரிவித்தார். இந்த முழக்கம் மூலம் கொரோனா பெருந்தொற்றை வெல்ல வேண்டும் என்றார். அதன்பின்னர் மீண்டும் டிசம்பர் மாதம் புதிய கொரோனா வைரஸ் வகையை எதிர்கொள்ள நாம் 'நோ கொரோனா நோ கொரோனா' என்ற முழக்கத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். அவரின் இந்த செயல் மிகவும் சர்ச்சைகுரியதாக அமைந்தது. 


மாட்டு கோமியம் குடித்தல்:




இந்துக்களின் பூஜைகளில் புனிதமாக பயன்படுத்தப்படுவது பசுவின் கோமியம். இந்த கோமியத்திற்கு கொரோனாவை குணப்படுத்த கூடிய சக்தி இருக்கிறது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து  அகில பாரத் இந்து மகாசாபா சார்பில் மாட்டு கோமியம் குடிக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின்னர் மீண்டும் உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ மாட்டு கோமியம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணப்படுத்தும் என்று கூறினார். அதன்மூலம் மீண்டும் இந்த போலி செய்தி சர்ச்சையாக மீண்டும் தொடர ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. அதை சிலர் பின்பற்றவும் செய்தனர்.


மக்கள் மீது சானிடைசர் தெளித்தல்:




கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு மிகுந்த சிரமத்துடன் திரும்பினர். அப்போது உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சானிடைசர்கள் தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்தச் செயல் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனித உரிமைகள் ஆணையம் வரை இந்த பிரச்னை பெரிதாக உருவெடுத்தது. சானிடைசர் தெளிப்பது மக்களுக்கு கொரோனாவை விட பெரிய ஆபத்து என்று பின்னர் மத்திய அரசு தெளிவுபடுத்தியது. 


மது குடித்தால் கொரோனா வராது:




கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று சானிடைசர்கள் வைத்து கையை சுத்தும் செய்வது. இந்த சானிடைசரில் சிறிய அளவில் ஆல்கஹால் இருக்கும். இதை வைத்து மதுபானம் அருந்தினால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்ற செய்தி அதிகமாக பரவியது. இது மதுபிரியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த செய்தியும் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. இன்று வரை மது குடித்தால் கொரோனா வராது என தவறாக எண்ணி கூடுதலாக குடிப்பவர்களும் இருக்கிறார்கள். 


மாட்டு சாணம் பூசுதல்:




கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையில் பெரிதாக இழுக்கப்பட்ட விலங்கு என்றால் அது மாடு தான். முதலில் மாட்டு கோமியம் குடித்தால் கொரோனா குணமாகும் என்று கூறப்பட்டது. பின்னர் மாட்டின் சாணத்தை உடம்பின் மீது பூசினால் கொரோனா வராமல் தடுக்க முடியும் என்ற கருத்து அதிகம் பரவியது. இதற்கு ஏற்ப குஜராத் மாநிலத்தில் அண்மையில் சிலர் தங்களின் உடம்பு மீது மாட்டு சாணத்தை பூசி கொண்டனர். இதுவும் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இவை தவிர சமீபத்தில் தமிழ்நாட்டில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவரும் ஒரே சமயத்தில் நீராவி பிடிக்க வசதி செய்யப்பட்டது. ரயில்வே காவல்துறையின் இந்த நடவடிக்கையை பலரும் கேள்வி எழுப்பினர். இந்தச் சூழலில் இந்த நடவடிக்கையை சரியானதல்ல என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். 


கொரோனா நோய் தொற்றை நாம் அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்கள் மூலம் தான் எதிர்கொள்ள வேண்டும் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. எனவே மருத்துவம் சாராத எந்தவித நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள கூடாது. அனைவரும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். நாம் அனைவரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.