இந்தியன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் மொழி நிறுத்தப்பட்டு இந்தி மொழி மட்டும் இடம்பெற்றிருந்தது சர்ச்சைக்கு வழிவகுத்தது. இந்நிலையில் மீண்டும் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது. IVRS சிஸ்டத்தில் மாநில மொழியை தேர்ந்தெடுக்கும் வசதியில் ஏற்பட்டிருந்த தடங்கல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்தியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனமான நாங்கள் நவம்பர் 1, 2023 முதல் ஏர்டெல்லிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள் IVRS (இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்) – 7718955555 சிஸ்டத்தில் மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது என்பதை  எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். 


தற்காலிகமாக நிகழ்ந்த இந்த மாற்றத்தின்போது எங்களது சிஸ்டத்தில் உங்களுக்கு விருப்பமான மொழி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் வரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தேர்வுகளை மட்டுமே நீங்கள் பெற முடிந்தது. இது உங்களுக்கு அசௌகரியத்தை  ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிகிறோம். நீங்கள் இதனை பொறுமையாக புரிந்துகொண்டுள்ளதற்கு  எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.  


இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுவிட்டது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதுடன், எங்களது IVRS சிஸ்டம் இப்போது தானாகவே மாநில மொழிகள் மற்றும் விருப்பமான மொழித்தேர்வு அமைப்புகளுடன் கூடிய வசதியை வாடிக்கையாளர்கள்  தடையின்றி பெறலாம் என்பதையும் உறுதி செய்கிறோம். 


Indane: இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் மொழி நிறுத்தம்.. சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..


LPG சிலிண்டர் மின்பதிவு வசதியை தமிழ் மொழியிலும் பெறலாம் என்ற தகவலுடன், பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் வாடிக்கையாளர்களுக்கும் உதவும் வகையில்  பல மாநில மொழித்தேர்வுகளுடன் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 


இந்தியன் ஆயிலில் உங்களுக்கு அனைத்து வழிகளிலும் சேவையளிப்பதில் முனைந்து செயல்படுகிறோம் என்பதுடன்  எங்கள் சேவைகள் உங்களுக்கு வசதியாகவும் சௌகரியமாகவும் இருப்பதையும் உறுதி செய்கிறோம். இந்த சேவை மாற்றத்தின் செயலாக்கத்தினால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்வதுடன் எங்கள் சேவைகளின் மீது நீங்கள் வைத்துள்ள இடைவிடாத நம்பிக்கைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


இந்தியன்ஆயில் – முன்னேறத்திற்கு சக்தியளிக்கிறோம், வாழ்விற்கு புத்துயிரூட்டுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






முன்னதாக, இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் இல்லாமல் இந்தி மட்டும் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். அதில், “இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில்  தமிழ் நிறுத்தம். இந்தி மட்டுமே இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? விதிகளை மீற உத்தரவிட்டது யார்? உடனடியாக தமிழ் சேவையை உறுதிப்படுத்துங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.