அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயராகி வருகின்றன. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அறிவித்தது.


அதன்படி, சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாகவும் மற்ற 4 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7ஆம் தேதி சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதே தேதியில், மிசோரத்தில் தேர்தல் நடைபெறுகிறது. வரும் நவம்பர் 17ஆம் தேதி, சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதே தேதியில், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும் தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், ஐந்து மாநில தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏபிபி செய்தி நிறுவனம், சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் பல அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.


Rajasthan Election: ராஜஸ்தானில் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா வசுந்தரா ராஜே? பாஜக செம்ம ஸ்கெட்ச்!


மிசோரம்:


வடகிழக்கில் அமைந்துள்ள மிசோரம் மாநிலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி, 17 முதல் 21 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோரம் மக்கள் இயக்கம், 10 முதல் 14 தொகுதிகளையும் காங்கிரஸ், 6 முதல் 10 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.


தெலங்கானா:


பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் தெலங்கானாவில் போட்டி கடுமையாக இருக்கும் என ஏபிபி - வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, 49 முதல் 61 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, 43 முதல் 55 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தெலங்கானாவில் 5 முதல் 11 இடங்களில் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள், 4 முதல் 10 இடங்களில் வெற்றி பெறும் கணிக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தான்:


கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் ராஜஸ்தானில் இந்த முறையும் அதே ட்ரெண்ட்தான் தொடர உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 101 தொகுதிகள் தேவைப்படுகிறது. இச்சூழலில், 114 முதல் 124 தொகுதிகளில் வென்று, பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


தற்போது ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், 67 முதல் 77 இடங்களில் வெல்லும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, 0 முதல் 4 தொகுதிகளை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 5 முதல் 9 தொகுதிகளில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.


மத்திய பிரதேசம்:


பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் இந்த முறை காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 118 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள பாஜக, 99 முதல் 111 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, 0 முதல் 3 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 0 முதல் 2 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சத்தீஸ்கர்:


பாஜக செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் 45 முதல் 51 தொகுதிகளில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பாஜக, 36 முதல் 42 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 2 முதல் 5 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: திருமணமான பெண்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. பாஜக கொடுத்த சர்ப்ரைஸ்..