ஒருவர் விரும்பும் மதத்துக்கு மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு என்றும் மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் பணம் மற்றும் பரிசு பொருட்களின் மூலம் நடைபெறும் மத மாற்றங்களை தடுக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெருமளவு மதம் மாற்றங்கள் நடந்ததற்கான தரவுகள் எங்கே என கேள்வி எழுப்பியதோடு இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஏதேனும் வழக்கு தொடர்ந்துள்ளார்களா என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் சமூகவலைதளங்களில் போடப்பட்டவற்றை ஆதராமாக கொள்ள முடியாது என்று கூறினர்.  


மேலும் பேசிய நீதிபதிகள், “ஒருவர் விரும்பும் மதத்துக்கு மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு. மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை. கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது தொடர்பான புகாரை விசாரிக்க ஆதாரம் இருக்க வேண்டும்.  கட்டாயப்படுத்தாத நிலையில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை.” என்று கூறியுள்ளனர்.