புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் என புதுச்சேரி தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. பண்டிகை காலங்கள் மற்றும் உள் ஒதுக்கீடு உள்ளிட்ட குளறுபடிகள் உடன் தேர்தல் நடைபெற உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் சட்டப் பேரவை தலைவர் செல்வம் தலைமையில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சட்டப் பேரவை வளாகத்தில் நடந்தது. இதில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என கூட்டத்தில் எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டினார்கள். பண்டிகை காலங்களை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் கூறினார்கள். இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், துணை சபாநாயகர், மற்றும் 23 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு தலைமையேற்ற சபாநாயகர் செல்வம், புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973, பிரிவு 9 உட்பிரிவு 8-ன் படியும் புதுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து சட்டம், 1973, பிரிவு 11, உட்பிரிவு 8-ன்படியும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளாட்சிகளில் உரிய இடஒதுக்கீடு செய்ய அரசுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு பிரிவு 243-D உட்பிரிவு 6 மற்றும் பிரிவு 243T உட்பிரிவு 6-ன் படியும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வழி உள்ளது.
இதன் அடிப்படையிலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், புதுச்சேரி அரசின் உள்ளாட்சித் துறை 07.03.2019 தேதியில் அரசாணை எண்.47 மற்றும் 48 ஆகிய அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5% பழங்குடியினருக்கு 0.5% இட ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பழங்குடியினருக்கும் இருந்த இட ஒதுக்கீடு உரிமை 06.10.2021 தேதியிட்ட அரசாணையின் மூலம் நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதிய அரசாணை வெளியிடுவதற்கு முன்னரே அரசாங்கத்தை கலந்து ஆலோசணை செய்யாமல், மாநிலதேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பழங்குடியினருக்கும் இருந்த இடஒதுக்கீடு உரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிடவில்லை என குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின் படி பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்காமலும், சுழற்சி முறை மாற்றம் அளிக்காமலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி வரையறைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். பிற்றபடுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை புறக்கணித்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்திருப்பது சட்ட விரோதம். சமூக நீதிக்கு எதிரான மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைஉடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மழைக்காலம், புதுச்சேரி விடுதலை நாள், கல்லறைத் திருநாள், தீபாவளி திருநாள் போன்ற திருவிழாக் காலங்களின் இடையில் தேர்தல் நடத்துவது நடைமுறைக்கு விரோதமானது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதால், இதில் உள்ள குளறுபடிகளை நீக்கி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டி துணை நிலை ஆளுநரிடம் நேரில் சென்று முறையிட வேண்டும். தன்னிச்கையாகவும் சட்ட விரோதமாகவும் முடிவுகளை எடுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து சபாநாயகர் செல்வம் தலைமையில் திமுக, காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், பாஜகவை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சபாநாயகர் செல்வம் தலைமையில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டாக தன்னை சந்தித்து உள்ளாட்சி தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான மனு ஒன்றினை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.