90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் `தி ஜங்கிள் புக்’, `மோக்லி’ முதலான கார்ட்டூன்கள் மிகவும் பிடித்தமானதாக இருந்திருக்கும். ஆனால் உண்மையாகவே மோக்லி ஒருவர் வாழ்ந்து வருகிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?


உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷார் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி ஒன்றில் வேட்டையாட சென்ற குழு ஒன்று ஓநாய்கள் கூட்டத்தின் நடுவே 6 வயது ஆண் குழந்தை ஒன்று இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். இந்த ஆண் குழந்தையை ஓநாய்கள் தத்தெடுத்து, வளர்த்திருப்பதாகவும் அவர்கள் அறிந்துள்ளனர். வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகள் பல முறை நிகழ்ந்துள்ளன. காடுகளின் விலங்குகளால் வளர்க்கப்படும் குழந்தைகள் குறித்த பதிவுகள் வரலாற்றில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 


ஓநாய்களால் வளர்க்கப்பட்ட சிறுவனைக் கண்ட வேட்டைக்காரர்கள் அது இயற்கைக்கு முரணானது எனக் கருதி, குழந்தையை மீண்டும் சமூக வாழ்க்கையுடன் கலந்து வாழ எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். இதனால் ஓநாய்கள் இருந்த குகையில் நெருப்பு வைத்ததோடு, பெண் ஓநாயைக் கொன்று சிறுவனை மீட்டு, உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சிகந்த்ரா மிஷன் ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதியில் சேர்த்துள்ளனர். அங்கு இந்த குழந்தைக்கு சனிசார் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 



சனிசார்


காடுகளில் தங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களைக் கழிக்கும் இந்தக் குழந்தைகளால் சமூகத்தில் இயல்பாக கலந்துரையாட முடியாது; மேலும் அவர்களால் நேராக நடக்கவும் முடியாது. எர்ஹார்ட் என்ற பாதிரியார் ஒருவர் சனிசாரைக் குறித்து கூறிய போது, `அவனால் பேச முடியாது; மற்ற குழந்தைகள் அவனை `பைத்தியம்’ என்று அழைத்தாலும் சில நேரங்களில் அவன் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியதும் உண்டு’ எனக் கூறியுள்ளார். 


காட்டில் இருந்து ஓநாய்களால் வளர்க்கப்பட்ட சனிசாரைப் போலவே அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் 4 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டனர். மேலும் கடந்த ஆண்டுகளில் இதே போன்று காட்டில் வளர்ந்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 


சனிசார் ஓநாய்களைப் போலவே உறுமுவது, ஊளையிடுவது, கைகளையும் கால்களையும் ஓநாய்களைப் போலவே நான்கு கால்களாகக் கருதி நடப்பது, சமைக்கப்படாத இறைச்சியை உண்பது, எலும்புகளைக் கடித்து பற்களைக் கூர்மையாக்குவது, விலங்குகளின் குரல்களில் கத்துவது என மிகவும் வித்தியாசமான குழந்தையாக இருந்துள்ளார். சிகந்த்ரா மிஷன் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் சனிசாருடன் பொறுமையாகப் பழகி, இயல்பாக மற்ற மனிதர்களைப் போலவே சாப்பிட பழக்கினாலும், அவர் பேசாத குழந்தையாகவே இருந்துள்ளார்.



சனிசார்


குறைந்தளவிலான ஆண்டுகளே வாழ்ந்த சனிசார், தன்னுடைய 34 வயதில் இறந்துள்ளார். தனது ஆதரவற்றோர் விடுதியிலேயே தன் வாழ்நாள் முழுவதுமாக வாழ்ந்த சனிசார் சற்று முன்னேற்றம் அடைந்தார். மேலும், அவரால் நடக்க முடிந்தது; பிறரைப் போல உடை அணியவும், தட்டில் இருந்து உணவு உண்ணவும் முடிந்தது. எனினும் உணவு உண்பதற்கு முன்பு, எப்போதும் அதன் வாசனையை நுகர்ந்த பிறகே உண்பாராம். 


தன் வாழ்நாளில் மனிதர்களின் ஒரே ஒரு பழக்கத்தை மட்டும் பழகிக் கொண்டார் சனிசார். புகைப்பிடிக்கத் தொடங்கிய சனிசார், தொடர்ந்து அதற்கு அடிமையாகியதோடு, 1895ஆம் ஆண்டு காசநோய் காரணமாக உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது.