நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பெட்ரோல் மற்றும் விலையேற்றம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ. 100 ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் அன்றாட மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், பெட்ரோல் விலையை சமாளிக்க, மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர் ராஜா காலத்து முறையை பின்பற்ற தொடங்கி விட்டார். அதாவது, குதிரையைத் தனது போக்குவரத்து வாகனமாக பயன்படுத்தி வருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் லாக்டவுன் தளர்வுகள் வழங்கப்பட்டு, பொது போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவுரங்காபாத்தைச் சேர்ந்த ஷேக் யூசுப் ஜிகர் என்ற நபர் மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் குதிரையை வாங்கி அதன் மூலம் வேலைக்கு சென்று வருகிறார்.
இவர் கல்லூரி ஒன்றில் லேப் அசிஸ்டென்ட் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தினந்தோறும் வீட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். இதையடுத்து, பெட்ரோல் விலை தொடந்து உயர்ந்து வந்ததால் கடும் சிரமத்திற்கு ஆளான யூசூப், 40 ஆயிரம் ரூபாய்க்கு குதிரையை வாங்கி, தினமும் அதில் வேலைக்கு சென்று வருகிறார்.
தற்போது, ஷேக் யூசுப் சாலையோரங்களில் குதிரை ஓட்டும் புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதும், பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.அதில், குதிரையை பராமரிக்க உங்களிடம் காசு இருக்கும்போது, பெட்ரோல் வாங்க காசு இல்லையா என்றனர்.
மேலும், குதிரையை வாகனங்களுக்கு பயன்படுத்துவது சரியல்ல என்றும், "விலங்குக் கொடுமை" என்றும் இணையத்தில் தெரிவித்தனர். தொடர்ந்து, ஏன் சைக்கிளை தேர்வு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்