பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே கூட்ட நெரிசல் காரணமாக ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. பெங்களூரு அணி வீரர்களை வரவேற்பதற்காக வழிநெடுகிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றன.
உயிர் பலி வாங்கிய கொண்டாட்டம்:
முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து சின்னசாமி மைதானம் வரை ஆர்சிபி அணிக்கு வெற்றி பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் அந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. இருந்தபோதிலும், ஆர்சிபி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானத்தை சுற்றி ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே பதற்றம்:
இறந்தவர்களின் உடல்களும் படுகாயம் அடைந்தவர்களும் பௌரிங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் கர்நாடக அரசின் சார்பாகவும் சின்னசாமி மைதானத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பாகவும் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.
கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக, மாலை 4:30 மணி முதல் கப்பன் பார்க் மற்றும் டாக்டர் பிஆர் அம்பேத்கர் விதான சவுதா ரயில் நிலையங்களில் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த கர்நாடக அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!