நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், எதிர்க்கட்சிகளின் திட்டம் என்னவாக இருக்கும்.? பார்க்கலாம்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
இந்த ஆண்டின் தொடக்க மாதத்தின் இறுதியில், அதாவது, ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்றது. பின்னர், ஏப்ரல் 4-ம் தேதி ஆண்டின் முதல் கூட்டத் தொடர் முடிந்து, தேதி குறிப்பிடாமல் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்-க்குப் பிறகு நடக்கும் கூட்டத் தொடர் - எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன.?
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது, இரவோடு இரவாக தாக்குதல் நடத்தி அழித்தது இந்தியா.
மிகவும் துல்லியமாக, தீவிரவாதிகளின் 9 நிலைகளை தாக்கி அழித்தது இந்திய ராணுவம். இதற்கு எதிர்வினையாற்றிய பாகிஸ்தான், இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள அப்பாவி மக்களை குறிவைத்து, ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதலில் ஈடுபட்டது. மேலும், ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், இதையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்தது இந்திய ராணுவம். இந்நிலையில், இரு தரப்பிற்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், சில நாட்கள் நீடித்த இருதரப்பு தாக்குதல்களும், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நிறுத்தப்பட்டன.
இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த தானே காரணம் என கூறிய ட்ரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தத்தை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் தனது சமூக வலைதள பக்கம் மூலம் அறிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் தாக்குதலை நிறுத்துவதற்காக தான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதனால் ஒரு பெரிய அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டதாகவும் கூறி வருகிறார். இதை இந்தியா மறுத்த போதிலும், ட்ரம்ப் தொடர்ந்து அவ்வாறே கூறி வருகிறார்.
எதிர்க்கட்சிகள் திட்டம் என்னவாக இருக்கும்.?
இந்நிலையில், ட்ரம்ப் விவகாரம் மற்றும் இந்த மோதலின் போது இந்தியாவின் பக்கம் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கேள்வி எழுப்பி வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்கனவே வலியுறத்தினார்.
இதனால், ஜூலையில் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த விவகாரம் குறித்து பிரச்னைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த மழைக்கால கூட்டத் தொடர் சிக்கலுக்கு நடுவே தான் நடைபெறும் என தெரிகிறது.