நாடு முழுவதும் உள்ள ஐஐடி மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்ச்சி விகிதத்தில் கடைசியில் இருந்து மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இது வலுவான கல்வி கட்டமைப்பைக் கொண்டிருக்கும் நிலையை மெல்ல இழக்கிறதா என்ற கேள்வியை கல்வியாளர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.

Continues below advertisement

தேசிய சராசரியைவிடத் தமிழகம் முன்னிலை

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் சிறந்து விளங்குவது அனைவரும் அறிந்ததே. இன்னும் சொல்லப்போனால், உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரியைவிடத் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஐஐடிக்களில் சேர நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு தேர்ச்சி விகிதத்திலும் தேர்வை எழுதியவர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தமிழ்நாடு 23.90% தேர்ச்சி விகிதத்துடன் கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

Continues below advertisement

யார் யார் எந்தெந்த இடம்?

ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வில் மேற்கு வங்கம் 35.3 சதவீதத் தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் 34.70%, ராஜஸ்தான் 34.50%,  மகாராஷ்டிரா 32.40%, ஹரியானா 32.30% என அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.

தமிழ்நாடு குறைவாகவே தேர்ச்சி

நாடு முழுவதும் 1,80,422 தேர்வர்கள் தேர்வை எழுதிய நிலையில், 54,378 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 30.1 சதவீதம் ஆகும்.  இந்த நிலையில், தமிழ்நாடு 23.90% தேர்ச்சி விகிதத்துடன் கடைசியில் இருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் தேசிய சராசரியைவிட தமிழ்நாடு குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து இந்தத் தேர்வை எழுதிய 7,787 பேரில் 1,859 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் கேரள, பிஹார் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் தெலங்கானா மாநிலத்தில் 5,964 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், ஆந்திரப் பிரதேசம் (5,317) மற்றும் கர்நாடகா (2,915) ஆகிய மாநிலங்கள் அனைத்தும் 30%-க்கும் அதிகமான தேர்ச்சி சதவீதத்தைப் பதிவு செய்தன.

என்ன காரணம்?

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், மாநில பாடத்திட்டத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், நுழைவுத் தேர்வுகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமை, தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு ஆகியவை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து ஐஐடி ஜேஇஇ தேர்வு பயிற்சியாளர் பவன் குமார் கூறும்போது, இந்தப் படிப்புகளுக்கான தயாரிப்புக்கு, கான்செப்டுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. சென்னை, கோவை தவிர பிற முக்கிய தமிழ் நகரங்களில், பயிற்சி மையங்களின் தரம் குறைவாகவே இருக்கிறது.

அதே நேரத்தில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் வெகு சீக்கிரமாகவே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கி விடுகின்றன’’ என்று தெரிவித்தார்.

எது எப்படியாயினும் தமிழ்நாடு இந்த விவகாரத்தில் விரைவில் விழித்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.