புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்காக, வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாவிட்டால், செல்போன்களை முடக்குவதற்கு வகை செய்யும் புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

கடனில் செல்போன் வாங்குவது அதிகரிப்பு

செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில், மூன்றில் ஒரு பங்கு சாதனங்களை வாடிக்கையாளர்கள் கடனில் வாங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது நாட்டில், 1.16 கோடி செல்போன் இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளதாக, தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராயின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அண்மைக்காலமாக, செல்போன் வாங்குவதற்காக கடன் பெறுவதும், அதை திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தான், இந்த புதிய விதிமுறையை கொண்டு வருவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது வாடிக்கையாளர் நலனை பாதிக்கும் என்ற அச்சமும் ஒருபுறம் எழுந்துள்ளது.

Continues below advertisement

ரிசர்வ் வங்கியின் திட்டம் என்ன.?

கடன் தவணையை செலுத்தாத வாடிக்கையாளர்களின் செல்போன்களை, செயலிகள் மூலம் முடக்கும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், இந்த ஆண்டு அந்த நிலை மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

கடன் வழங்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து, விரைவில் கடன் தவணை செலுத்தாதவர்களின் செல்போன்களை முடக்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உருவாக்கினால், அது தொடர்பாக, கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பதையும், நிதி நிறுவனங்களால் முடக்கப்படும் செல்போன்களில் இருந்து எந்த தனிப்பட்ட தகவல்களையும் எடுக்கக் கூடாது என்பதும் கட்டாயமாக்கப்படும் என தெரிகிறது.

கடனை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகள் நிதி நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அது நுகர்வோரின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒரு லட்சத்திற்கும் குறைவாக வழங்கப்படும் கடன்கள், தவணை செலுத்தப்படாமல் போகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த புதிய விதிமுறை உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டால், எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்கள் பயபடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் மறுபுறம், இந்த விதிமுறை லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது செல்போன் தான் எல்லாவற்றிற்குமே அத்தியாவசியமாகிவிட்டதால், இது நிச்சயம் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதனால், முடக்கப்படும் செல்போனின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியம் காக்கப்படுவதை உறுதி செய்ய நிதி நிறுவனங்களிடம் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.