தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை பளியக்கரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சுங்கக் கட்டண வசூல் தடையை செப். 15 வரை நீட்டித்துள்ளது கேரள உயர்நீதிமன்றம்.

Continues below advertisement

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 544ல் பளியக்கரை(Paliyekkara) சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி அமைந்துள்ள நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. தொடர் புகாரையடுத்து இதனை பராமரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈடுபட்டுள்ளது. பணி காரணமாக சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Continues below advertisement

இந்நிலையில் இதுதொடர்பான பொதுநல வழக்கில், நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை, போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்யும் வரை பளியக்கரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் கடந்த ஆக. 6 ஆம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, முதலில் 4 வாரங்களுக்கு சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில் அது செப். 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதனால் கடந்த ஒரு மாதமாக பளியக்கரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனிடையே இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலைகளை சரிசெய்த பிறகே கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படும் என்று உச்சநீதிமன்றமும் கூறியது.

தொடர்ந்து செப். 10 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், பளியக்கரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற உத்தரவு தொடருகிறது என்றும் எடப்பள்ளி-திருச்சூர் நெடுஞ்சாலையில் நெரிசலைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருச்சூர் ஆட்சியரிடம் அறிக்கை அளிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியரும் இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணை செப். 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.