இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைப்படி, ரெப்போ வட்டி விகிதம், இம்முறை மாற்றமின்றி 6.5% ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 






ரெப்போ வட்டி என்றால் என்ன?


நிதி பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் கடன் அளிக்கும். அதன் பெயர்தான் ரெப்போ வட்டி ஆகும். பணவீக்கத்தின்போது, கடன் வாங்குவதை தவிர்க்கும் வகையில் ரெப்போ வட்டியை மத்திய வங்கி உயர்த்தும். ரிசர்வ் வங்கி ஒரு வருடத்தில் ஆறு இருமாத கொள்கை கூட்டத்தை நடத்தும். இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும். 


வட்டி விகிதத்தில் மாற்றமில்லை:


இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை இன்று (10.08.2023)  வெளியிடப்பட்டது. ரெப்போ வட்டி விகிதம், இம்முறை மாற்றமின்றி தொடர்வதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ( Shaktikanta Das) அறிவித்துள்ளார். அதன்படி, ரெப்போ விகிதம் 6.5% ஆக தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 9 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ச்சியாக 6 முறை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை 250 புள்ளிகள் உயர்த்தப்பட்டது.  ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 25 புள்ளிகள் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்ட்ட நிலையில், தற்போது அதில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயராத காரணத்தால் வீட்டுக் கடன், வாகன கடன், நகை கடன் போன்றவற்றுக்கு ஈஎம்ஐ தொகை உயராது.






நாணய கொள்கை வெளியிட்டில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “நமது பொருளாதாரம் சீராக தொடர்ந்து வளர்ந்து, உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இது உலக வளர்ச்சிக்கு 15% பங்களிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். மேலும், 2023ஆம் ஆண்டில் ரியல் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்றும், பணவீக்கத்தை குறைக்க தொடர்ந்த நாணய கொள்கை கூட்டம் வாயிலாக வலியுறுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தக்காளி மற்றும் பிற காயகறிகளில் விலை சமீபகாலமாக உயர்ந்துள்ளது என்றும் இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.