இந்தியாவில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு தொடர்பாக பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிற்கு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார்.


ராஜ்நாத் சிங் பதிலடி:


ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அதைதொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங் “உலகில் வாழும் அனைத்து மக்களையும் குடும்ப நபர்களாக கருதும் ஒரே நாடு இந்தியா என்பதை ஒபாமா மறந்துவிடக் கூடாது. அவர் அமெரிக்க பிரதமராக இருந்தபோது எத்தனை முஸ்லிம் நாடுகளைத் தாக்கியுள்ளார் என்பதையும் ஒபாமா சிந்திக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 






ஒபாமா சொன்னது என்ன?


பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப்பயணத்தின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடியுடன் பேசுவதாக இருந்தால், ”இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது  என்பதே எனது பேச்சுவார்த்தையின் முக்கிய பகுதியாக இருந்திருக்கும். அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது. இந்த விஷயங்களைப் பற்றி நேர்மையாகப் பேசுவதே முக்கியம் என்று நான் கருதுகிறேன்" என்று ஒபாமா கூறினார்.


நிர்மலா சீதாராமன் பதிலடி:


இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனும் வகையில் பேசிய, ஒபாமாவிற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ​​”முன்னாள் அமெரிக்க அதிபர் (பராக் ஒபாமா) இந்திய முஸ்லிம்கள் குறித்து கருத்து வெளியிட்டது ஆச்சரியமாக இருந்தது. அமெரிக்காவுடன் நல்ல நட்புறவை விரும்புகிறோம். ஆனால் இந்தியாவின் மத சகிப்புத்தன்மை குறித்து அங்கிருந்து கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒபாமா ஆட்சியில் இருந்த போது முஸ்லிம்கள் அதிகமாக உள்ள 6 நாடுகள் மீது குண்டுவீசி தாக்கப்பட்டன. சுமார் 26,000க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன” என சாடினார்.


ஒபாமாவை குறிவைக்கும் பாஜக தலைவர்கள்:


”இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயாகவும் உள்ளது.  விரக்தியிலிருந்து வெளியேற நிறைய வழிகள் உள்ளன. ஆனால் உண்மைகள் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என” மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, முன்னாள் அதிபர் ஒபாமாவை சாடியுள்ளார். இதேபோன்று பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஒபாமவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.