கேரள மாநிலத்தில் வரும் மே மாதம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில ரேஷன் கடைகளில் மக்கள் பயன்பெறும் வகையில் வங்கிச் சேவையை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கேரள மாநிலத்தில் மொத்தம் 14,000 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 800 கடைகளில் போதிய இட வசதி உள்ளது. அப்படிப்பட்ட கடைகளின் ஊழியர்கள் கடையில் வங்கிச் சேவை வழங்கும் விரிவாக்கப் பணியை செய்ய இசைவு தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக இந்த வாரம் கேரள உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் முக்கிய கூட்டத்தைக் கூட்டவுள்ளார். அந்தக் கூட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.
இந்தத் திட்டத்தின் நோக்கம், இபிஓ சேல் பாயின்ட் EPoS (Electronic Point of Sale) இயந்திரம் மூலம் வங்கி சேவைகளை வழங்குவதே. இந்த சேவையை வழங்குவதற்காக 4 வங்கிகள் முன்வந்துள்ளன. இதனைப் பயன்படுத்திக் கொள்ள ரேஷன் அட்டைதாரர்களின் ரேஷன் அட்டையானது சிப் அடிப்படையிலான ஸ்மார்ட் கார்டாக இருக்க வேண்டும்.


இந்தத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ரேஷன் கடைகளில் உள்ள வங்கிச் சேவை மையம் மூலமாகவே மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியனவற்றை செலுத்தலாம். 




இது தொடர்பாக அமைச்சர் அனில் கூறும்போது, இந்தத் திட்டம் முதற்கட்டமாக 1000 ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்படும். அதுவும் ஓராண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் ஏற்கெனவே உள்ள மொபைல் ரேஷன் கடை திட்டமானது மேலும் 36 பழங்குடியின கிராமங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


மொபைல் ரேஷன் கடை நீட்டிப்பு விழா கடந்த வியாழக்கிழமை பாரசாலா சட்டப்பேரவை தொகுதியில் நடந்தது. அம்பூரி பகுதியில் உள்ள கிராம மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


அடுத்ததாக மொபைல் ரேஷன் திட்டமானது ஆராலம், கண்ணூர் ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கும் ஏப்ரல் 28ல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ரேஷன் திட்டத்திற்கான வாகன உதவியை அந்தந்தப் பகுதி எம்.எல்.ஏக்கள் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்த அரசு மொபைல் ரேஷன் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்ததற்கு காரணமே பல்வேறு கிராமங்களிலும் மஞ்சள் குடும்ப அட்டை வைத்துள்ளோர் தங்களுக்கான ரேஷனைப் பெறுவதில் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள் என்பதே என்று அமைச்சர் விளக்கினார்.


ரேஷன் அட்டைகளுக்கு வீடு தேடி சென்று பொருட்களை வழங்கும் திட்டத்தை டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சிறப்பாக நிறைவேற்றியது. தற்போது பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்த பின்னர் அங்கும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் சேர்க்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ரேஷன் கடை வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை ஒருங்கிணைப்பது மிகச்சரியான சிறப்பான சமூக சேவை என சமூக ஆர்வர்லர்கள் பலரும் வரவேற்பது குறிப்பிடத்தக்கது.